
கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் - செல்வி தம்பதியரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி அருகே கனியாமூரிலுள்ள சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ஆம் தேதி மர்மமான முறையில் மாடியில் இருந்து விழுந்து மரணம் அடைந்தார். இதற்கு நீதிகேட்டு பெரியளவில் போராட்டம் நடைபெற்றது. அது பள்ளிக்குள் கலவரமாக மாறியது. மாணவியின் மரணம் தொடர்பான வழக்கு ஸ்ரீமதி வழக்கு எனத் தமிழகத்தில் பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் என்பவர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில். “இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் இந்த விசாரணை நேர்மையான முறையில் நடைபெறவில்லை. பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கப்பட வேண்டும்” எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் அமர்வில் இன்று (03.07.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, “கள்ளக்குறிச்சி கனியாமூர் பள்ளி மாணவி மரணத்தை அடுத்து ஏற்பட்ட வன்முறை தொடர்பான வழக்கில் 4 மாதங்களில் விசாரணையை முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. இந்த 4 மாதக்காலத்திற்குள் சிபிசிஐடி போலீசார் விசாரணையை முடிக்காவிட்டால் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடரலாம். பள்ளியில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை மீட்கவும் புலன் விசாரணை அதிகாரிக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தார்.