
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மாடாம்பூண்டி கூட்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (23). இவர் புதுச்சேரியில் தங்கி பணி நிமித்தமாக திருபுவனை பகுதிக்குச் சென்று வந்து கொண்டிருந்தபோது திருபுவனை பாளையத்தைச் சேர்ந்த காயத்ரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இவர்களுக்கு தற்போது ஒன்றரை வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. மனைவி மற்றும் குழந்தையுடன் மாமியார் வீட்டில் வசித்து வந்த நிலையில் காயத்ரிக்கு வேறு ஒருவருடன் முறை தவறிய உறவு இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் வாக்குவாதம் மற்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் மனைவியிடம் இருந்து பிரிந்த ராஜேஷ்குமார் முதலியார்பேட்டையிலும், திருக்கோவிலூரிலும் மாறி மாறி தங்கி பணியாற்றி வந்துள்ளார்.
இதனிடையே ராஜேஷ்குமாரின் மைத்துனர் செல்வராஜ் (எ) அமல்ராஜ் ராஜேஷ்குமாரை சமாதானம் செய்து அழைத்து வந்து தனது தங்கையுடன் குடும்பம் நடத்த வைத்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் (04/06/2020) மாலை பைக்கில் வெளியே சென்ற ராஜேஷ்குமார் அதன்பிறகு காணவில்லை. இந்த நிலையில் திருபுவனை பாளையத்தை ஒட்டிய மல்லிகை நகர சவுக்குத் தோப்பு பகுதியில் கழுத்து அறுபட்ட நிலையில் ராஜேஷ்குமார் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஐ.ஜி சுரேந்திரசிங் யாதவ், எஸ்.பி ராகுல் அகர்வால், எஸ்.பி ரங்கநாதன், திருபுவனை இன்ஸ்பெக்டர் கணேசன், சப்- இன்ஸ்பெக்டர்கள் அஜய்குமார், ராஜேஷ் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் ராஜேஷ்குமாரை அவரது மைத்துனர் செல்வராஜ் கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில் ராஜேஷ்குமார் மனைவியின் குடும்பத்தாருக்கும் ராஜேஷ்குமாருக்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் (04/05/2020) மாலை ராஜேஷ்குமாரும் அவரது மைத்துனர் செல்வராஜூம் சம்பவம் நடந்த பகுதியில் மது அருந்தியுள்ளனர். அதன் பிறகே ராஜேஷ்குமார் கொல்லப்பட்டுள்ளார் எனத் தெரிய வந்துள்ளது. இதனால் குடும்பப் பிரச்சினை காரணமாக ராஜேஷ்குமாரை அவரது மைத்துனர் திட்டமிட்டு மது அருந்த வரச் சொல்லி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து செல்வராஜை கைது செய்த போலீசார் ராஜேஷ்குமாரின் மனைவி காயத்ரியையும், இந்தக் கொலை சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இரண்டு நபர்களையும் விசாரித்து வருகின்றனர்.