இந்தியாவின் 11 ஆவது குடியரசுத் தலைவரும், விண்வெளி விஞ்ஞானியுமான டாக்டர். ஏ.பி.ஜெ.அப்துல்கலாமின் பிறந்த நாள் இன்று. குடியரசுத் தலைவர் பதவிக்குப் பின்னர் மாணவர்களே இந்தியாவின் எதிர்காலம் எனப் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடல்களை நடத்தி மாணவர்களுக்கு அறிவுப் பேரொளியாகத் திகழ்ந்தவர் அப்துல் காலம். கடந்த 2015 ஆம் ஆண்டு ஷில்லாங்கில் உயிரிழந்தார். இன்று அவர் பிறந்தநாள் என்பதால் ராமநாதபுரத்தில் உள்ள அவரது நினைவிடம் வண்ண அலங்கார விளக்குகள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அப்துல் கலாமின் பிறந்தநாளுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், 'நேரிய வழியில் உழைத்துயர முடியுமென நிரூபித்தவர். இந்தத் தேசம் செல்லவேண்டிய திசையைக் காட்டியவர். பல கோடி இந்தியர்களை இலட்சியக் கனவுகளை நோக்கிச் செலுத்தியவர். காந்திக்குப் பிறகு காலம் நமக்களித்த இன்னொரு தேசப்பிதா ஐயா அப்துல் கலாம் பிறந்தநாள் இன்று. அவர் வழி நின்று அறவழி செல்வோம்' என அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.