தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞரின் நூற்றாண்டு நினைவினைப் போற்றிடும் வகையில் கவிஞர் மேத்தா, பின்னணிப் பாடகி பி. சுசீலா ஆகியோருக்கு, “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள்” வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிடும் வாழ்நாள் சாதனையாளர்களைப் போற்றிப் பாராட்டிடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், கலைஞர் பெயரில், ‘கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது’ ஒவ்வொரு ஆண்டும் கலைஞரின் பிறந்த நாளான ஜூன் மாதம் 3ஆம் நாளான்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு 10 இலட்சம் ரூபாயும், நினைவுப் பரிசும் வழங்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் கடந்த 2022 ஆம் ஆண்டு சட்டப்பேரலையில் அறிவிக்கப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினைச் செயல்படுத்துகின்ற வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், விருதாளர்களைத் தேர்வு செய்யும் பொருட்டு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையில், நடிகர் சங்கத் தலைவர் நாசர், திரைப்பட இயக்குநர் கரு. பழனியப்பன் ஆகியோரை உறுப்பினர்களாகக் கௌண்ட குழு அமைக்கப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு கலைஞரின் பிறந்த நாள் நினைவாக வழங்கப்படும், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதினை திரைப்படத் துறையில் தடம்பதித்து ஏறத்தாழ 500 திரைப்படங்களுக்கு மேல் கதை, திரைக்கதை, வசனம் எழுதிப் புகழ் குவித்துள்ள ஆரூர்தாஸ் எனப்படும் திருவாரூர் தாஸ் அவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், முதுமை காரணமாக ஓய்விலிருக்கும் ஆரூர்தாஸின் இல்லத்திற்கே நேரில் சென்று (03.06.2022) அன்று இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்தார். அதோடு கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, வழக்கமாக வழங்கப்படும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 11.07.2024 அன்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் தலைமையிலான குழு கூடி, தமிழ்ப் பேராசிரியரும், புதுக்கவிதைக்கு ஏற்றம் தந்தவரும், சாகித்ய அகெதமி விருது பெற்றவரும், கலைஞரால் பாராட்டப்பட்டவருமான கவிஞர் மு.மேத்தாவுக்கும், திரையுலகில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலமொழிப் பாடல்களைப் பாடியவரும், தென்னிந்தியாவின் இசைக்குயில் என்றும், மெல்லிசை அரசி என்றும் பாராட்டப்பட்டுள்ளவரும், கலைஞரால் பல நிகழ்வுகளில் பாராட்டப்பட்டவருமான திரைப்படப் பின்னணிப் பாடகி பி.சுசிலாவுக்கும் 2023 ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் வழங்கிட பரிந்துரைத்துள்ளது.
கலைஞரின் நூற்றாண்டு நினைவாக 2023ஆம் ஆண்டிற்கான கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள கவிஞர் முகமது மேத்தா பெரியகுளத்தில் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் நாள் பிறந்தவர். தமிழ் மீது தணியாத பற்று உடையவர். சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி மாணவர்களின் அன்பைப் பெற்றவர். மரபுக் கவிதைகள், புதுக்கவிதைகள், சிறு கதைகள், நாவல்கள், கட்டுரைகள், எனப் பல்வேறு நூல்களையும் படைத்து 70-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதி தமது தனி முத்திரைகளைத் திறம்படப் பதித்தவர். அவர் எழுதிய, ‘ஊர்வலம்’ எனும் கவிதை நூலுக்குத் தமிழ்நாடு அரசின் முதல் பரிசும், ‘ஆகாயத்துக்கு அடுத்த வீடு’ எனும் கவிதை நூலுக்கு, ‘சாகித்ய அகாடமி’ விருதும் பெற்ற பெருமைக்குரியவர். தம் வாழ்நாள் முழுதும் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் கவிஞர் மு.மேத்தாவைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால், வழங்கப்படுகிறது.
கலைஞரின் நூற்றாண்டு நினைவாக, பெண்மையைப் போற்றும் வகையில் சிறப்பினமாக 2023 ஆம் ஆண்டிற்கு மட்டும் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள இசைக்குயில் பி. சுசீலா 1935ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் நாள் ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் பிறந்தவர். இசை மீது கொண்டிருந்த அதீத பற்றின் காரணமாக ஆந்திராவின் புகழ்பெற்ற இசைமேதை துவாரம் வெங்கிடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்று 1950ஆம் ஆண்டு சென்னை வானொலியில், ‘பாப்பா மலர்’ எனும் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார்.
தேனினும் இனிய தனது குரலால் அனைவரையும் கவர்ந்து, ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலான தனது இசைப் பயணத்தில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தொடர்ந்து பாடி சாதனைகள் படைத்தவர். இசையுலகத்தினராலும், ரசிகர்களாலும் ‘இசைக்குயில்’ என்றும், ‘மெல்லிசை அரசி’ என்றும், ‘கான கோகிலா’ என்றும் பாராட்டப்பட்டவர் அவர், சிறந்த பின்னணிப் பாடகி எனத் தமிழ்நாடு அரசின் விருதுகளையும், மத்திய அரசின் விருதுகளையும் பலமுறை பெற்றுள்ளார். அதோடு, இந்திய மொழிகளில் அதிக எண்ணிக்கையில் பாடல்களைப் பாடியமைக்காக கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்ற பெருமைக்குரியவர். இசைக்குத் தன்னையே அர்ப்பணித்து இன்றளவும் தனித்துவமாய் விளங்கிடும் பி.சுசிலாவைப் பெருமைப்படுத்தும் வகையில், கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகளை 30.09.2024 அன்று தலைமைச் செயலகத்தில் வழங்கிச் சிறப்பிக்கிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.