மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கலில் உள்ள கட்சி அலுலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது "அதிமுக அரசை பொறுத்தவரை இந்த பட்ஜெட் கடைசி பட்ஜெட். இதற்குமேல் ஆளும் கட்சியாக இருந்து பட்ஜெட் தாக்கல் செய்ய அதிமுக அரசுக்கு மக்கள் இடம் தரமாட்டார்கள். இந்த பட்ஜெட்டில் நிதி நிர்வாகம் இல்லை. மத்திய அரசிடம் நிதி கேட்டு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களும் அறிவிக்காத பட்ஜெட் ஆகும். கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு 25 ஆயிரம் கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் வருவாய் குறைவு செலவு அதிக அளவில் உள்ளது. சென்ற ஆண்டு பற்றாக்குறை 14 ஆயிரம் கோடியாக இருந்தது. இந்த ஆண்டு 25 ஆயிரமாக அதிகரித்து இருப்பது தமிழக அரசின் மோசமான நிலையை காட்டுகிறது.
மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசுக்கு வரக்கூடிய நிதி பங்கீடு என்பது 33 ஆயிரம் கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசுக்கு மத்திய அரசின் பங்கீடு 26 ஆயிரம் கோடி தான் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 7000 கோடி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும். ஆனால் இதுவரை வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியைப் பெற தமிழக அமைச்சர்கள் யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மத்திய அரசிடம் நிதி வற் புறுத்தினால் ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுத்து விடுவார்கள் என்ற அச்சத்தில் அமைச்சர்கள் யாரும் நிதியை கேட்டுப் பெறவில்லை.
தங்களது ஆட்சி பாதுகாப்பதை ஒன்றை மட்டுமே தமிழக அமைச்சர்கள் பிரதானமாக கொண்டுள்ளனர். மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதியை கேட்டுப் பெற முடியாமல் போன காரணமாகத்தான் தமிழக மக்கள் தற்போது நடுத்தெருவில் நிற்கின்றனர். தமிழக அரசின் சொந்த வருவாயும் தற்பொழுது குறைந்துள்ளது. உலக வங்கியிடம் முதல்வர் கடன் வாங்குவதற்காக தான் அமெரிக்கா சென்றுள்ளார் என்பது தற்போதுதான் தெரிய வந்துள்ளது. சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை அனைத்து தரப்பினருக்கும் இருக்கும் பயனளிக்க போவதில்லை. மாநில அரசின் மோசமான நிதி நிர்வாகம் தான் இந்த பட்ஜெட். தமிழக அரசு இந்த ஆண்டு வாங்கி உள்ள கடனையும் சேர்த்து 4 லட்சம் கோடி கோடியாக தமிழக மக்கள் தலை மேல் விழுந்துள்ளது.
தமிழக அரசுக்கு எதிராக வாக்களித்த 11 எம்எல்ஏக்களின் வழக்கு என்பது விளையாட்டு மைதானத்தில் கால்பந்தாட்டம் போல் உள்ளது. இதை எதிர்த்து திமுக நீதிமன்றம் சென்றது. இந்த வழக்கில் கால வரை முறையை உருவாக்கி சபாநாயகர் உடனடியாக தீர்ப்பு வழங்க வேண்டும். சபாநாயகர் இந்த விவகாரத்தில் காலதாமத படுத்தினார் என்று சொன்னாலே முடிவு எடுப்பதில் கஷ்டம் உள்ளது என்று அர்த்தம். எதிர்த்து ஓட்டு போட்டதால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் பதவி பறிபோய்விடும் மற்றும் ஆட்சியும் போய்விடும் ஆகையால் தான் முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தி வருவதாக தெரிகிறது. என்னைப் பொருத்தவரை உச்சநீதிமன்றம் இதற்கு கால வரைமுறை செய்து கொடுத்து இருக்கலாம்.
டி.என்.பி.எஸ்.சி முறைகேட்டில் அரசு சொல்வதை நம்ப முடியவில்லை. டிஎன்பிஎஸ்சி விவகாரத்தில் தேர்வு தாள்களை மாற்றியது சினிமா வினை போல் நடந்துள்ளது. டி.என்.பி.எஸ்.சி என்பது அரசு விரும்புவார்களை கமிட்டி உறுப்பினர்களாக போடுவது தான். குறைபாடாகும் உறுப்பினராக வருவதற்கு லட்சக்கணக்கில் பணம் கொடுத்துதான் பதவிக்கு வருகின்றனர். டி.என்.பி.எஸ்.சி விவகாரத்தில் ஆட்சியில் இருப்பவர்களுக்கு சம்பந்தம் இல்லை என்றால் கடைநிலை ஊழியர் மட்டும் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபடுவதற்கு வாய்ப்பு இல்லை. கடந்த 2001ஆம் ஆண்டு முதல் இடைத்தரகர் ஜெயக்குமார் இதுபோன்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகிறார்.ஏற்கனவே இது குறித்து நாங்கள் புகார் கொடுத்தும் என்று வழக்கில் கைது செய்யப்பட்ட ஒருவர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அப்பொழுதே ஜெயக்குமார கைது செய்திருந்தால் இதுபோல் தொடர்ந்து நடப்பதற்கு வாய்ப்பு இல்லை. தேர்வு முறையை தமிழக அரசு மாற்ற வேண்டும். இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஒப்புக் கொள்ளாதது ஏன்?. சிபிசிஐடி அதிகாரிகள் நியாயமாக விசாரணை நடத்தினால் அவர்களை உடனடியாக இந்த அரசு இடமாற்றம் செய்து விடுகிறது. தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை அதிகமாக நடப்பதற்கு காரணம் சமூகத்தில் உள்ள போதை பழக்கம் தான். தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கூறிய அரசு 500 கடைகளை மூடியது. அதன் பின் கடைகளை மூட வில்லை. தமிழகத்தில் கஞ்சாவும் போதை பழக்கமும் அதிகளவில் உள்ளது. தமிழக அரசுக்கு ஒரே வருமானம் ஒரே நம்பிக்கை நட்சத்திரம் அரசு மதுபானக்கடை தான். அதன் மூலமாகத்தான் அதிக வருமானம் வந்து கொண்டிருக்கிறது என்று கூறினார். இந்த பேட்டியின்போது திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம். முன்னாள் மாவட்ட செயலாளர் பாண்டி உள்பட நகர ஒன்றிய பொறுப்பில் உள்ள சிலர் கலந்து கொண்டனர்