கரூர் மாவட்டம், பொருந்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாரதியார்(29). இவர் திருமணமாகி மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதே பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து, குளித்தலை அனைத்து மகளிர் காவல்துறையினர் அவரைக் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கானது கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி நசீமா பானு, காணொளிக்காட்சி மூலம் தனது தீர்ப்பை வழங்கினார். அதில், சிறுமியைக் கடத்திச் சென்றதற்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனையும், போக்சோ சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்தார்.
மேலும், இதனை ஏக காலத்திற்கு அனுபவிக்க வேண்டும் என்றார். ஏக காலத்திற்கு என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் பாரதியார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து பாரதியாரை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.