உளுந்தூர்பேட்டையில் வீட்டில் வளர்க்கும் நாய் குடும்பத்தினருக்கு உதவி செய்யும் விதமாக தேங்காய் உரிக்கும் பணியை தினசரி செய்து வருவது பலரையும் வியப்படைய செய்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் இளவரசன். இவர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார். இவரது வீட்டில் ஜானி என்ற நாயை செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். குடும்பத்தினருடன் பாசத்தோடு இருக்கும் ஜானி குடும்பத்தில் உள்ளவர்கள் கூறும் ஒரு சில வேலைகளையும் செய்து வருகிறது.
அதே போன்று தினசரி காலை நேரத்தில் வீட்டில் சமையலுக்கு பயன்படும் தேங்காய்களை தாமாக முன்வந்து வாயால் கடித்து அதனை உரித்து வருவதாகவும் கூறுகின்றனர். மேலாக இளவரசன் வீட்டில் வளர்ந்து வரும் ஜானி அவர்களின் செல்லக்குட்டி ஆக இருந்து வருகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் கூறியவுடன் தரையில் அமர்வது, நடைபயிற்சி செல்வது உட்பட தினசரி அவர்கள் கூறும் அனைத்து வார்த்தைகளுக்கும் கட்டுப்பட்டு செயல்படுவதாகவும் கூறுகின்றனர்.
இதேபோல் பகல்நேரம் மட்டுமின்றி இரவு நேரத்திலும் இளவரசன் வீட்டை சுற்றி வரும் செல்லப்பிராணியான ஜானி அந்த வீட்டின் மாடிப்படியில் ஏறிக் கொண்டு அங்குள்ள ஜன்னல் வழியாகத் தெருவில் நடந்து செல்லும் நபர்களைக் கண்காணித்தும் வருகிறது. அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் குற்றச் சம்பவத்தில் ஈடுபடுபவர்களையும் கண்டு குறைப்பதால் அந்தப் பகுதியில் பாதுகாப்பான சூழல் உள்ளது எனக் கூறுகின்றனர்.