வேலூர் மாவட்டம் தோட்டப்பாளையத்தில் உள்ள பிரபல நகைக்கடையான ஜோஸ் ஆலுக்காஸில் சுவரில் துளையிட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. வேலூர் க்ரீன் சிக்னல் பகுதிக்கு அருகில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் பிரதான சாலையில் உள்ள இந்தக் கடையில் திருட்டு நிகழ்ந்துள்ளது. இரவு 10 மணிவரை கடை செயல்பட்ட நிலையில், இரவு 12 முதல் அதிகாலைக்குள் இந்தத் திருட்டு நிகழ்ந்திருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். நகைக்கடையின் பின்புற சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த கொள்ளையர்கள், கீழ் தளத்திலிருந்த நகைகளை அள்ளிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
புகாரைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட எஸ்.பி. மற்றும் வேலூர் சரக டிஐஜி தலைமையிலான போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் 3 தளங்கள் கொண்ட அந்தக் கடையில் 35 கிலோ தங்கம், வைரம், வெள்ளி நகைகள் திருடப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மதிப்பு கோடிக்கணக்கான ரூபாய் என தெரியவந்துள்ளது. சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விசாரிக்கப் போலீசார் முடிவெடுத்துள்ளனர். மீதமுள்ள நகைகளைக் கணக்கீடு செய்துதான் துல்லியமாக எவ்வளவு கொள்ளை நடந்தது என்பது தொடர்பான தகவல் தெரியவரும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள லலிதா ஜுவல்லரியில் இதேபோல் துளையிட்டு கொள்ளை நிகழ்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.