நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் கடந்த 15 ஆம் தேதி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அசுத்தமான தண்ணீர் காரணமாக நோய் பாதிப்பு ஏற்பட்டது என விசாரணையில் தெரியவந்ததாக சுகாதாரத்துறையினர் தெரிவித்திருந்தனர். நோய் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளில் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறையினர் ஆய்வு மேற்கொண்டுவருகின்றனர். ஒரே வாரத்தில் 200 பேருக்கு மஞ்சள் காமாலை தொற்று ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், நெல்லை களக்காடு சிவதாபுரம் பகுதிகளில் உள்ள நீரோடைகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு மஞ்சள் காமாலை நோய் பரவியுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.