கடுமையான பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் 22ஆம் தேதி மல்லிகைப்பூ கிலோ ரூ.3,132 என விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சத்தியமங்கலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 2,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் மல்லிகை பூ சாகுபடி செய்து வருகின்றனர். இங்குப் பறிக்கப்படும் பூக்கள் சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் ஏல முறையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கும் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
கடந்த சில நாட்களாகவே சத்தியமங்கலம் பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால், மல்லிகைப் பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதன் காரணமாக சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்து மல்லிகைப்பூ கிலோ ரூ.3,132 என விற்பனையானது. சத்தியமங்கலம் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மூலம் செயல்படும் பூ மார்க்கெட்டின் 22ஆம் தேதி விலை நிலவரப்படி மல்லிகைப்பூ கிலோ ரூ.3,132க்கும், முல்லைப்பூ கிலோ 500 ரூபாய்க்கும், காக்கடா கிலோ 850 ரூபாய்க்கும், செண்டு கிலோ 81 ரூபாய்க்கும், ஜாதி முல்லைப்பூ கிலோ 750 ரூபாய்க்கும், கனகாம்பரம் கிலோ 600 ரூபாய்க்கும், சம்பங்கி கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையானது. பூக்களின் விலை உயர்வால் சத்தியமங்கலம் பகுதி மலர் விவசாயிகளின் முகங்கள் மலர்ந்துள்ளது.