Skip to main content

கீரமங்கலத்தில் மக்கள் போராட்டத்தையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது

Published on 13/08/2017 | Edited on 13/08/2017
கீரமங்கலத்தில் மக்கள் போராட்டத்தையடுத்து டாஸ்மாக் கடை மூடப்பட்டது

கீரமங்கலத்தில் இயங்கி வந்த ஒரே டாஸ்மாக் கடையும் மக்கள் போராட்டத்தையடுத்து மூடப்பட்டது. அதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர்.



டாஸ்மாக் கடை :

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் 4 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தது. நீதிமன்ற உத்தரவுப்படி 3 கடைகள் மூடப்பட்ட நிலையில் கடைவீதியில் இருந்த ஒரு டாஸ்மாக் கடை மட்டும் செயல்பட்டு வந்தது. அந்த டாஸ்மாக் கடையையும் அகற்ற வேண்டும் என்று பெண்கள்ரூபவ் பொதுமக்கள் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஆலங்குடி வட்டாச்சியர் அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் 50 நாட்களுக்கு பிறகு கடையை மூடிக் கொள்வதாக அதிகாரிகள் உத்தரவாதம் எழுதிக் கொடுத்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. 

ஆனால் 50 நாட்கள் காலம் 10 ந் தேதியுடன் முடிவடைந்த நிலையில் 11ந் தேதியும் மீண்டும் கடை திறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இளைஞர்கள் டாஸ்மாக் கடைக்கு சென்று கடையை மூட முயன்றனர். அதன் பிறகு டாஸ்மாக் கடை நிர்வாகத்திற்ன சார்பில் மேலும் 15 நாட்கள் அவகாசம் கேட்கப்பட்டது. ஆனால் இளைஞர்கள் சம்மதிக்கவில்லை.

திரண்ட பெண்கள் :

இந்த நிலையில் அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தபடி 50 நாளில் மூட வேண்டிய கடை மீண்டும் திறப்பதை எதிர்த்தும் கடையை உடனே மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பெண்கள் பொதுமக்கள் அனைத்து கட்சி பிரமுகர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் போலிசார் குவிக்கப்பட்டனர். கீரமங்கலம் போலிஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் டாஸ்மாக் கடைக்கு செல்லும் வழியை அடைத்தனர்.

அதன் பிறகு திரண்டிருந்த பெண்கள் கடைக்கு பூட்டுப் போட அணிவகுத்து வந்தனர். தடுப்புகள் வைக்கப்பட்டிருந்ததால் அதே இடத்தில் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு அமலாக்க துறை) இளங்கோவன், ஆலங்குடி காவல் துணை கண்காணிப்பாளர் முத்தலிபு, வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் ஆகியோர் மற்றும் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பெண்கள் கடையை மூடும் வரை போராட்டம் நடக்கும் என்றனர். அதன் பிறகு டாஸ்மாக் கடை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதனால் பெண்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பெட்டிச் செய்திகள் :

குழந்தைகளை காப்பாற்ற வேண்டும்.. போராட்டத்தில் கை குழந்தையுடன் கலந்து கொண்ட சுமதி என்ற பெண்.. என் வீட்டில் இந்த மதுவால் தினமும் சண்டை நடக்கிறது குழந்தைகளை கவணிக்க முடியவில்லை. அனால் இந்த கடையை அகற்றினால் என்னைப் போன்ற பெண்கள் வாழ முடியும். டாஸ்மாக் கடை தான் வேண்டும் என்றால் எங்களுக்கு மண்எண்ணெய் கொடுங்கள் தீ குளிக்கிறோம் என்று கண்ணீர்விட்டு கதறி அழுதார்.

அதே போல சின்னப்பொண்ணு என்ற பெண்.. என் வீட்டில் 10 மா நிலம் இருந்தும் குடியால் அந்த நிலத்தில் விவசாயம் செய்ய முடியவில்லை என்றார். மற்றொரு பெண்.. இன்று காலை போராட்டத்திற்கு புறப்படும் போதே.. முடிஞ்சா டாஸ்மாக் கடையை மூடிப்பார் என்று என் கணவர் சவால் விடுகிறார் என்றார்.

கீரமங்கலத்தில் இனி டாஸ்மாக் கடைகள் இல்லை. கீரமங்கலத்தில் 4 டாஸ்மாக் கடைகள் இருந்த நிலையில் 3 கடைகள் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டது. எஞ்சிய கடையும் மக்கள் போராட்டத்தால் மூடப்பட்டுவிட்டதால் இனி கீரமங்கலம் பேரூர் அராட்சியில் டாஸ்மாக் கடைகள் இல்லை. மாற்ற கடைகள் திறக்க இரண்டு முறை நடந்த முயற்சிகளும் மக்கள் போராட்டத்தால் முறியடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

-இரா.பகத்சிங்.

சார்ந்த செய்திகள்