புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மக்கள் போராட்டம்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில் உள்ள கரகத்திக்கோட்டையில் இயங்கி வரும் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி 200-க்கு மேற்பட்ட பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டைப்பட்டிணம் - ஆவுடையார்கோவில் செல்லும் முக்கிய சாலையில் கரகத்திகோட்டையில் புதிதாக டாஸ்மாக்கடை துவங்கப்பட்டு ஒரு மாதமாக வியாபாரம் நடந்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வருவாய்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பலமுறை மனு கொடுத்தும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் ஆத்திரமடைந்த கரகத்திக்கோட்டை, மஞ்சக்குடி, விளத்தூர், பயமறியானேந்தல், கோட்டைப்பட்டிணம் ஆகிய கிராமங்களை சேர்ந்த கிராம பொது மக்கள் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வருவாய்துறை மற்றும் டாஸ்மாக் நிர்வாகத்துடன் போலீசாரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் கடையை அகற்றும் வரை போராட்டம் நடக்கும் என பொதுமக்கள் கூறியுள்ளனர்.
- இரா.பகத்சிங்