மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் மறைந்து செயல்படுகிறது மாநில அரசு என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கொள்கை விளக்க கூட்டம் திருச்சியில் இன்று மாலை நடைப்பெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன்,
காவிரி பிரச்னையில் நூற்றாண்டுகளாக தமிழக உரிமை பறிக்கப்பட்டுள்ளது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே ஆக வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தில் மத்திய அரசு செய்து வருவது தவறு. "ஸ்கீம்" என்பதை என்னவென்று கேட்டு காலதாமதம் செய்வதை ஏற்க முடியாது. இதற்கு மேல் பேசுவது அவமரியாதை. காவிரியில் நமக்கான உரிமையை அரசியல்வாதிகள் குளறுபடி செய்து தட்டிபறிக்கின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை என்றால் தமிழகம் அமைதியான முறையில் ஒத்துழைக்க மறுக்கும். உறங்குபவர்களை தட்டி எழுப்பி விடலாம். உறங்குவது போல் நடிப்பவர்களை ஒன்றும் செய்ய முடியாது. உண்ணாவிரதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை, உண்ணுவதில்தான் எங்களுக்கு நம்பிக்கையுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தே ஆக வேண்டும். மக்களை திசை திருப்பாதீர்கள் கர்நாடக தேர்தல் முடிந்தால் யாரையாவது உண்ணாவிரதம் நடத்தச் சொல்லி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பார்கள்.
நீருக்காக கெஞ்ச வைத்துவிட்டது மத்திய அரசின் முதுகுக்கு பின்னால் மறைந்து கொண்டு செயல்படுகிறது மாநில அரசு. இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வேண்டும் என்பது எனது கனவு. அரசியலில் சூழ்ச்சி வேண்டாம், நேர் கொள்வோம்; எதிர் கொள்வோம். காவிரி பிரச்னையில் தீர்வை நோக்கி மக்கள் நீதி மய்யம் செல்கிறது. சேர வேண்டிய நேரத்தில், சேர வேண்டியவர்களுடன் சேருவோம்.
உடல் நலமும், மகளிர் நலனும் மக்கள் நீதி மய்யத்தின் கொள்கைகள். விவசாயம், நீர் வளம், பாசனப்பரப்பு ஆகியவை செயல்படுத்த முழு வீச்சில் பணிகள் துவங்கும். மழை நீரை சேமிக்க சிறு, சிறு அணைகள் கட்டப்படும். ஏரி, குளங்கள் தூர்வாரப்படும். சொட்டு நீர் பாசனம், தெளிப்பான் பாசனம், நவீன பாசன முறைகளை செயல்படுத்துவோம்.
தொழிற்சாலைகளுக்கு மய்யம் எதிரானது இல்லை. தவறு செய்யும் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குவதை எதிர்க்கிறோம். திறன் மேம்பாட்டு வாரியங்கள் அமைக்கப்படும். தொழில் வளத்தை பெருக்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
லோக் ஆயுக்தா அமைக்கப்படும். 69 சதவீட இட ஒதுக்கீடு என்பதை மக்கள் நீதி மய்யம் முழுமையாக ஆதரிக்கும். விவசாயத்தில் பெண்களுக்கான வேலை வாய்ப்பை சிறு தொழில்களாக உருவாக்கி தர வேண்டும் என்று அவர் கூறினார்.
பொதுக்கூட்டம் முடியும் நேரத்தில் கமல்ஹாசனே பாடிய அவரது கட்சியின் கொள்கை விளக்கப்பாடலும், பின்பு தேசிய கீதமும் இசைக்கப்பட்டது.