
மகளிருக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசுகையில், “நம்முடைய முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை படிப்படியாக ஒவ்வொன்றாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். அதில் மிகவும் முக்கியமான அறிவிப்பு மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு கடன் தள்ளுபடி. அது நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் நேற்றைக்கும் இன்றைக்கும் 33 கோடி அளவிற்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து நமது மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை நானும் மாவட்ட ஆட்சித் தலைவரும் அக்கறை எடுத்து இருக்கிறோம். இந்த நிகழ்ச்சியில் மட்டும் 4 கோடியே 69 லட்சம் ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. புதியதாக ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் கடன் வழங்குகிறோம். இதெல்லாம் நம்முடைய முதல்வர் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள். இன்னும் நிறைவேற்றக்கூடிய திட்டமாக இருக்கக் கூடிய மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கின்ற திட்டத்தை விரைவில் நமது முதல்வர் அறிவிக்க இருக்கிறார். அது எந்த தேதி, எந்த மாதம் என்பது அவருடைய வாயிலிருந்து வந்தால்தான் அந்த அறிவிப்புக்கு மரியாதை இருக்கும். ராஜபாளையம் மேம்பாலப் பணி இன்னும் ஒன்று அல்லது ஒன்றரை மாதத்திற்குள் முடிந்து விடும்'' என்றார்.
'பாஜக அண்ணாமலை திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறாரே' என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு. ''அண்ணாமலைக்கு வேறு என்ன வேலை இருக்கிறது. விமர்சிப்பது மட்டும்தான் அவரது வேலை. எதிர்க்கட்சியாக இருப்பவர்கள் ஆளுங்கட்சியை விமர்சிப்பார்கள்'' என்றார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர், ‘பாஜகவில் அண்ணாமலை வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்' என கேள்வி எழுப்ப... சிரித்துக்கொண்டே எழுந்து சென்றார்.