பத்திரிகையாளர்களைத் தரக்குறைவாக விமர்சித்த பாஜகவைச் சேர்ந்த ஹெச்.ராஜாவிற்குப் பத்திரிகையாளர் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
அண்மையில் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது பத்திரிகையாளர்களைத் தரம் தாழ்த்தி பாஜகவின் ஹெச்.ராஜா விமர்சித்திருந்தார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஹெச்.ராஜாவின் பேச்சுக்குச் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 'தொடர்ந்து அநாகரிக சொற்களை ஹெச்.ராஜா பயன்படுத்துவதை பாஜக கண்டுகொள்ளாமல் இருக்கிறது. ஆகவே ஊடகங்கள் ஹெச்.ராஜாவைப் புறக்கணிக்க வேண்டும்' எனத் தெரிவித்துள்ளது.
அதுபோல் 'அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தெரிவித்துள்ளது. 'இதுபோன்ற தொடர் தாக்குதல்கள் பாஜகவின் ஜனநாயக விரோத போக்கை எதிர்க்கும் வகையில் பத்திரிகையாளர்களை மேலும் ஒன்று திரட்டும் என்பதை அக்கட்சி கருத்தில் கொள்ள வேண்டும்' எனச் சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை இன்று அவரது டிவிட்டர் பக்கத்தில், 'ஜனநாயகத்தின் தாங்கும் தூணாக மதிக்கப்படும் பத்திரிகைகள் மற்றும் ஊடகத்தின் மீது பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும் மரியாதை உண்டு. நல்லவற்றை எடுத்துரைத்து அல்லவற்றைக் கண்டித்துச் சுட்டிக்காட்டும் உற்சாகப்படுத்தும் உணர்வூட்டும் பாராட்டும்...' எனப் பதிவிட்டுள்ளார்.