தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நாள்தோறும் பல்வேறு துறையைச் சார்ந்த மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறையைச் சார்ந்த அமைச்சர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். அத்துடன், புதிய அறிவிப்புகளையும் அமைச்சர்கள் வெளியிட்டுவருகின்றனர்.
அந்த வகையில், இன்று (25/08/2021) நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் மதுரையில் உள்ள பென்னி குவிக் இல்லம் இடிக்கப்பட்டது தொடர்பாக காரசார விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது பேச வாய்ப்பு கிடைக்காதது நெஞ்சில் உள்ளது. அவையில் உறுப்பினர்கள் பேசும்போது குறுக்கீடு செய்ய வேண்டாம் என முதலமைச்சர் எங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தவறான கருத்தை உறுப்பினர் பதிவு செய்வதால் குறுக்கீடு செய்ய வேண்டியுள்ளது. பென்னி குவிக் கடந்த 1911ஆம் ஆண்டு மறைந்துவிட்டார். 1912ஆம் ஆண்டுதான் அந்தக் கட்டடம் கட்டப்பட்டது. பென்னி குவிக்கின் இல்லமாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை" எனத் தெரிவித்தார்.