திருவண்ணாமலை நகரத்திற்கு அருகில் உள்ளது தேவனந்தல் கிராமம். இந்த கிராம ஊராட்சி எல்லையில் உள்ள வேடியப்பன் – கவுத்திமலைக்கு அருகே 2 ஏக்கர் அளவில் மரங்களை வெட்டிவிட்டு, நிலத்தை வருவாய்த்துறை மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அதிகாரிகள் சமன்படுத்த துவங்கினார்கள். இது குறித்து அந்தப்பகுதி அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் சொல்ல மறுத்துள்ளனர்.
நம்மவூரில் வேலை செய்யறாங்க, எதுக்காக மரங்களை வெட்டி, இடத்தை சமன்படுத்தறாங்கன்னு கேள்வி எழுப்பினால் பதில் சொல்லமாட்டிங்கிறாங்க, அப்போ நமக்கு எதிரா ஏதாவது பெருசா செய்யப்போறாங்களா என மக்களிடம் அச்சம் உருவானது. பொதுமக்கள் திரண்டு சென்று கேள்வி எழுப்பிய பின்னர், அங்கு வந்த அதிகாரிகள் குப்பை கிடங்கு அமைக்கப்போவதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள் எந்த குப்பை? எங்கிருந்து இந்த குப்பைகளை கொண்டு வரப்போகிறீர்கள் எனக்கேள்வி எழுப்ப அதிகாரிகள் மவுனத்தை கடைப்பிடித்துள்ளனர். நீங்க வேலை செய்யக்கூடாது என பொதுமக்கள் திரண்டு நின்றதால் வேலை நிறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 11ஆம் தேதி காலை 9 மணியவில் இரண்டு ஜே.சி.பி. இயந்திரங்கள் அந்தப்பகுதியின் வனப்பகுதிக்கு சென்று மரங்கள், செடி கொடிகளை பிடுங்கி எரிந்துள்ளன. அதனை யாரும் தடுக்காத வண்ணம் நூற்றுக்கும் அதிகமான போலீஸாரை அந்தப்பகுதியில் நிறுத்தினர். இதனால் அதிர்ச்சியான தேவனந்தல், புனல்காடு, கலர்கொட்டாய், வேடியப்பனூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்கள், ஆண்கள் அங்கே குவிந்தனர். ஜே.பி.சி. வேலை செய்யும் இடத்துக்கு பொதுமக்கள் யாரும் செல்லக்கூடாது என நூற்றுக்கும் அதிகமான போலீஸாரை குவித்து தடுத்தனர்.
இதனால் அதிர்ச்சியான பொதுமக்கள், திருவண்ணாமலை டூ காஞ்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மூன்று மணி நேரமாக நடந்த மறியல் போராட்டத்தை தொடக்கத்தில் காவல்துறை சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டது. ஆனால், பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து செல்லாததால் இந்த பிரச்சனையை அதிகாரிகள் வேறு விதமாக அணுகத்துவங்கினர். கட்சி ஒன்றின் பிரதிநிதிகளை அழைத்து மக்களை சமாதானம் செய்யச்செய்தனர்.
ஆர்.டி.ஓ. வெற்றிவேல், ஊரக வளர்ச்சித்துறையின் உதவி இயக்குநர் லட்சுமிநரசிம்மன் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சாலைமறியலில் இருந்த பொதுமக்களை ஆலமரத்தின் கீழ் அழைத்துவந்து உட்காரவைத்து, மத்தியரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குப்பை கிடங்கு அமைக்கப்படுகிறது. இந்த பகுதியைச் சேர்ந்த 6 கிராமங்களின் குப்பைகளைத்தான் இந்த கிடங்குக்கு கொண்டுவந்து கொட்டித் தரம் பிரிக்கப்போகிறோம் என்றார்கள்.
சமாதானப் பேச்சுவார்த்தையில் முன்னின்ற பா.ம.க., சி.பி.எம். நிர்வாகிகள், மத்தியரசு மற்ற கிராமங்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்துகிறதா எனக்கேள்வி எழுப்ப, அதிகாரிகள் பதில் சொல்லவில்லை. அதிகாரிகள் பதில் சொல்லாததால் அதிருப்தியான பொதுமக்கள் இதுதொடர்பாக கேள்விகளை எழுப்பத்துவங்கினர். அப்போது மலையோரம் ஜே.சி.பி. வேலை செய்வதை தடுக்க பெண்கள், ஆண்கள் என திரண்டு அந்தப்பகுதிக்கு சென்றனர். குழந்தைகளோடும் சில பெண்கள் அங்கு சென்றனர். அவர்களை அந்தப்பகுதிக்கு செல்லவிடாமல் பெண் போலீஸார் தடுத்து நிறுத்தி பிடித்து தள்ளினர். இதனால் அதிர்ச்சியும், கோபமுமான பெண்கள் முன்னேற, போலீஸார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர்.
இதனைப்பார்த்து அதிர்ச்சியான முக்கிய பிரமுகர்கள், நீங்க அராஜகமாக கைது செய்யறது நல்லதுக்கில்ல. ஒருதிட்டத்தை கொண்டு வர்றிங்கன்னா மக்கள் கருத்து கேட்காமல் எப்படி கொண்டு வரலாம்? அந்த திட்டம் குறித்து மக்களிடம் விளக்கனுமா வேண்டாமா? மக்களின் அச்சத்தை போக்கிவிட்டு அதுக்குபிறகு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துங்க. அதைவிட்டுட்டு போராடும் மக்களை மிரட்டுறது, கைது செய்யுறது சரியில்ல என்றனர்.
அதன்பின் வேலைகளை நிறுத்துகிறோம், பொங்கலுக்கு பிறகு முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, திட்டம் குறித்து மக்களிடம் விவரிக்கிறோம், அதுவரை போராட்டம் செய்யமாட்டோம் என்றால் கைதானவர்களை விடுவிக்கிறோம் என அதிகாரிகள் கூறியதை தொடர்ந்து மாவட்ட நிர்வாகமும் – பொதுமக்களும் சமாதானத்துக்கு வந்தனர். இதன்பின்னர் 5 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த சாலைமறியல், போராட்டம் போன்றவை முடிவுக்கு வந்தன.
மக்கள் அச்சம் கொள்வதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.
இப்போது குப்பை கிடங்கு அமைக்கும் பகுதியில் உள்ள கவுத்தியப்பன் – வேடியப்பன் மலையை 10 ஆண்டுகளுக்கு முன்பு, பெரிய கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றுக்கு தாது வெட்டியெடுக்க நீண்ட வருடத்துக்கு ஒப்பந்தத்துக்கு தர முடிவு செய்தது அரசு. இதனால் ஏற்படும் பாதிப்புகளை உணர்ந்த மக்கள் பெரும் போராட்டங்கள் நடத்தி அதனை தடுத்து நிறுத்தினர். உச்சநீதிமன்றமும் மக்கள் கருத்து கேட்காமல் முடிவு எடுக்ககூடாது என தடைவிதித்தது.
தற்போது, திருவண்ணாமலை மாவட்டத்தில் செங்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவண்ணாமலை டூ பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் பாலியப்பட்டு, கோலாப்பாடி பகுதிகளில் சிப்காட் அமைக்கப்படுகிறது. இதற்கான இடங்களை வளம் கொழிக்கும் விவசாய நிலங்களை வருவாய்த்துறை கையகப்படுத்த முடிவு செய்துள்ளது என்கிற தகவலை தொடர்ந்து கடந்த ஒருமாதமாக அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்திவருகிறார்கள்.
இதுப்பற்றியெல்லாம் தேவனந்தல் மக்கள், எங்களிடம் எந்த தகவலும் கூறாமல், கருத்து கேட்காமல் ஒரு திட்டத்தை செயல்படுத்தியதால் அச்சம் அடைந்துள்ளார்கள். அந்த அச்சத்தைப் போக்கவேண்டிய மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் ஆணவப்போக்கோடு செயல்படுவதால்தான் சிக்கல் என்கிறார்கள்.
படங்கள் - எம்.ஆர்.விவேகானந்தன்