Skip to main content

“முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் தான் காவேரி கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாகச் செயல்பட உள்ளது” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 29/04/2023 | Edited on 29/04/2023

 

"It is only during the regime of Chief Minister Stalin that the Cauvery Joint Drinking Water Project is fully functional" - Minister I. Periyasamy

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் அனுமந்தராயன்கோட்டை, மைலாப்பூர், ஆவாரம்பட்டி, குட்டத்துப்பட்டி, கோனூர், தருமத்துப்பட்டி, சுரக்காய்பட்டி, முத்தனம்பட்டி, புளியராஜக்காப்பட்டி, டி.புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் ரூ.213.98 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட உள்ளது. 

 

அதன் அடிப்படையில் அனுமந்தராயன்கோட்டையில் புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கான பூமி பூஜை நடைபெற்றது. விழாவிற்கு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் சிவகுருசாமி தலைமை தாங்கினார்.  திட்ட இயக்குநர் திலகவதி, சத்தியமூர்த்தி, பங்குத் தந்தை சூசை ஆரோக்கியதாஸ், ஊராட்சி மன்றத் தலைவர் நிர்மலா இன்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகப் பொறியாளர் பிச்சான்டி வரவேற்றார். 

 

இதில் சிறப்பு அழைப்பாளராக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்துகொண்டு மேல்நிலை தண்ணீர் தொட்டிக்கான பூமி பூஜை பணிகளை துவக்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பின் பொதுமக்கள் மத்தியில் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “இந்த புதிய குடிநீர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். காரணம் 2010ம் வருடம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் முதல்வராக இருந்தபோது ரூ.200 கோடி மதிப்பில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்திற்கு கொண்டுவரப்பட்டது. அதன்பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அதிமுக அரசு 10 வருடங்களாக ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை விரிவுபடுத்தாமல் விட்டுவிட்டது. 

 

தற்போது தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ரூ.213.98 கோடி மதிப்பில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் முழுமையாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பட உள்ளது. குறிப்பாக அனுமந்தராயன்கோட்டை ஊராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீர், ஆத்தூர் காமராஜ் நீர்தேக்க குடிநீர் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

 

புதிய காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் சிறு கிராமமாக இருந்தாலும் குறிப்பாக ஆதிதிராவிடர் மக்கள், அருந்ததியினர் வசிக்கும் காலனி பகுதிகளில் மேல்நிலை தண்ணீர் தொட்டி மூலம் குடிதண்ணீர் விநியோகம் செய்வதால் தங்குதடையின்றி அவர்களுக்கும் குடிதண்ணீர் கிடைக்கும். எந்த ஒரு குடும்பத்திற்கும் குடிதண்ணீர் கிடைக்காத நிலை ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் ஏற்படப் போவதில்லை. அந்த அளவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மக்களுக்கு தங்குதடையின்றி அனைத்து கிராம மக்களுக்கும் குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்