தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும், கோவையில் அமைச்சருக்கு நெருக்கமானவர் என அறியப்படும் தி.மு.க. நிர்வாகியான மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
இதேபோன்று தமிழகத்தில் பிரபலமான அப்பாசாமி ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல நிறுவனங்கள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தயாரிப்பாளரும், திரையரங்கு உரிமையாளருமான அபிராமி ராமநாதன் வீட்டிலும், நேற்று முதல் சோதனையானது நடைபெற்று வருகிறது. அபிராமி மால் இடிக்கப்பட்டு அங்கு கட்டடம் கட்டும் டெண்டர் அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு அளிக்கப்பட்டதில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகக் கூறி இந்த சோதனை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.
வருமான வரித்துறை சோதனையில் அபிராமி ராமநாதன் வீட்டிலிருந்து கணக்கில் வராத நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுகுறித்து அபிராமி ராமநாதனிடம் கேட்டபோது, இந்த நகை வாங்கியதற்கான ஆவணங்கள் அலுவலகத்தில் இருப்பதாகக் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ராமநாதனை போயஸ் கார்டனில் உள்ள அவரது அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.