2022-2023ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்றது. தமிழக நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் இடப்பெற்றிருந்த மகளிருக்கான 1,000 ரூபாய் உரிமைத்தொகைக்கான அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாகவும், சரியான பயனாளிகளிடம் அத்திட்டம் சரியாகச் சென்று சேர வேண்டும் என்பதால் அதற்கான பணிகள் உள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதேவேளையில் மூவலூர் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதித்திட்டம் என மாற்றப்பட்டு 6 முதல் 12ஆம் வகுப்புவரை படித்து மேல்கல்விக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு மேல்கல்வியை இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை மாதம் 1,000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்ற அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. இந்நிலையில் இத்திட்டம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறுகையில், ''மாணவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்குவதன் மூலம் தங்கத்தை வைரமாக மாற்றுகிறோம். அதிமுக ஆட்சியில் நான்கு ஆண்டுகளாகத் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பயனாளிகளுக்குச் சரியான தங்கம் தரவில்லை. திட்டத்திற்கு வாங்கிய தங்கத்தையும் அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை'' எனத் தெரிவித்துள்ளார்.