நாட்டில் நிலவுகிற ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்றும் வகையில், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில், ஆக்சிஜன் தயாரிப்பிற்காக மட்டுமே ஸ்டெர்லைட்டை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, நேற்றிரவு (27.04.2021) ஸ்டெர்லைட் மக்கள் எதிர்ப்பு இயக்கம் சார்பில், ஆலை திறப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் போராட்டக் குழுவின் ஒழுங்கிணைப்பாளரான பாத்திமா பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.
இந்தக் கூட்டத்தில், ‘ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் என்பது மக்கள் தன்னெழுச்சியாக முன்வந்து போராடியதால் ஆலை மூடப்பட்டது. எந்தவித அரசியல் கட்சிகளாலும் நடத்தப்படவில்லை. ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி தரலாம் என்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகள் மட்டுமே போதும் என்ற அடிப்படையில் முடிவு செய்தது கண்டிக்கத்தக்கது. ஆலை திறப்பது குறித்து மக்களின் கருத்துகளைக் கேட்பதே சரியானதாகும். அதனால், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் முடிவை கைவிட வேண்டும். மேலும், ஆலையிலுள்ள தாமிர உற்பத்தி அலகுகள் அத்தனையையும் பிரித்து அழிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.
இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலைப் பக்கம் உள்ள பண்டாரம்பட்டி கிராமத்தின் பொது மைதானத்திற்குத் திரண்டு வந்த மக்கள், ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று தங்களின் எதிர்ப்பைத் தெரிவித்து, பண்டாரம்பட்டியின் வசந்தி மற்றும் அருணாதேவி தலைமையில் தர்ணா போராட்டம் நடத்தினர்.
இதையறிந்து ஸ்பாட்டுக்கு வந்த எஸ்.பி.ஜெயகுமார், சப் கலெக்டர் சிம்ரத்ஜித் சிங் உள்ளிட்ட அதிகாரிகள், கிராம மக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது கரோனா தொற்று பரவல் ஊரடங்கு காரணமாக அனுமதியின்றி எதுவும் நடத்தக்கூடாது என்று தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட போராட்டக் குழுவின் வசந்தி, அருணாதேவி உள்ளிட்டோர் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதாகத் தெரிவித்துக்கொண்டு கலைந்து சென்றனர். தவிர இன்றைய தினம் இதுகுறித்த கோரிக்கை மனுவை மாவட்டக் கலெக்டரிடம் அளிக்க உள்ளதாகவும் எதிர்ப்பாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஸ்டெர்லைட் திறப்பு அறிவிப்பு சர்ச்சையாகி வருகிறது.