தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மாநில பொதுக்குழுக் கூட்டம் நேற்று (18.04.2021) மாலை சிதம்பரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். இதில் மாநிலம் முழுவதும் இருந்து கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
அதில் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும், தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழ்வழி பூசையும், குடமுழுக்கும் நடைபெற வேண்டும், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசனை தாக்க திட்டமிடும் நபர்களை கைது செய்ய வேண்டும், இந்து அறநிலையத்துறையைக் கலைத்திடக் கோரும் ஜக்கி வாசுதேவின் கோரிக்கையை மறுத்து தமிழக அரசு அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் வரும் மே மாதம் 8ஆம் தேதி சனிக்கிழமை தஞ்சையில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் மணியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும், சட்ட விரோத காரியங்கள் அங்கு நடைபெறுவதால் மையத்தை அரசு கையகப்படுத்த வேண்டும். இந்து அறநிலையத்துறையின் கீழ் ஈஷா மையத்தை நிர்வாகம் செய்ய வேண்டும். ஜக்கி வாசுதேவ் ஆதரவாளர்களுக்கு கோவிலுக்குள் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளித்தது தவறான முன்னுதாரணமாகும். இதற்கு மூல காரணமாக விளங்குபவர் ஜக்கி வாசுதேவ். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும், சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்ய விரும்புபவர்கள் அவர்களுக்கு அர்ச்சனை செய்யலாம். மேலும் ஜக்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டு கோவில்களில் தமிழ்வழியில் பூசையும் குடமுழுக்கும் நடத்த வேண்டும். இந்து அறநிலையத்துறையைக் கலைத்துவிட வேண்டும் என்ற ஜக்கி வாசுதேவின் கோரிக்கையை ஏற்க மறுத்து அரசு அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் வருகிற மே 8ஆம் தேதி தஞ்சையில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. அதில் தமிழ் தேசிய பேரியக்கத்தினரும், தமிழ் உணர்வாளர்களும் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும்.
ஜக்கி வாசுதேவ், ஈஷா அறக்கட்டளை சம்பந்தமாக பத்திரிகைகளில் செய்தி வெளியிட்ட ஒருங்கிணைப்பாளரான என் மீது ஜக்கி வாசுதேவ் அமைப்பைச் சேர்ந்தவர்களும், ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் தொலைபேசியில் வன்முறையாக மிரட்டல் விடுத்து, எனது வீட்டை சுட்டிக்காட்டி தாக்குவதற்கு உள்நோக்கத்துடன் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே உண்மை குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும்” என்றார்.