சென்னை காவல்துறை கமிஷ்னர் ஏ.கே.விஸ்வநாதன், தன்னை சந்திக்க யார் வந்தாலும் அவர்களைக் காத்திருக்க வைக்காமல் சந்திக்கும் இயல்பு கொண்டவர். அப்படிப்பட்ட அவர் இரண்டு நாட்களாக யாரையும் சந்திக்காமல் தவிர்க்கிறார். ஏதோ ஒருவித நெருடல் அவரிடம் இருப்பதாகச் சொல்கிறது ஐ.பி.எஸ். வட்டாரம்.
சமீபத்தில், முதல்வர் எடப்பாடியை சந்தித்த கமிஷ்னர் விஸ்வநாதன், "ஒன்றரை ஆண்டுகளாக காவல் ஆணையராக இருந்து வருகிறேன். போதும், இந்த பொறுப்பு. இப்பதவியிலிருந்து விடுபட நினைக்கிறேன். என்னை இதிலிருந்து விடுவித்து, உளவுத்துறைக்கு மாற்றிவிடுங்கள் என கோரிக்கை வைத்திருக்கிறாராம்.
அதேபோல, மாநில உளவுத்துறை ஐ.ஜி.யாக இருக்கும் சத்தியமூர்த்தி, " உளவுத்துறையிலிருந்து என்னை மாற்றிவிடுங்கள் " என ஏற்கனவே முதல்வர் எடப்பாடியை சந்தித்து கோரிக்கை வைத்திருக்கிறார். இரண்டு உயரதிகாரிகள், தாங்கள் வகிக்கும் பொறுப்பிலிருந்து விலகுவதாக முதல்வரிடம் சொல்லியிருப்பது உள்துறை அதிகாரிகளிடம் விவாதப் பொருளாகியிருக்கிறது. இந்த சூழலில், மேற்குமண்டல ஐ.ஜி. பொறுப்பில் இருக்கும் பாரி, பணியிலிருந்து ஓய்வு பெறுவதையொட்டி, அப்பதவியில் தன்னை நியமிக்குமாறு தற்போது முதல்வரிடம் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார் சத்தியமூர்த்தி.
அடுத்த வருடம், பணியிலிருந்து ஓய்வு பெற விருக்கும் சத்தியமூர்த்தி, ஓய்வு பெறும்போது எவ்வித டென்சனும் இல்லாமல் அமைதியாக, ஓய்வு பெற விரும்பியே இந்த கோரிக்கையை வைத்தாராம். மேலும், தேர்தல் நெருங்கும் காலக்கட்டம் என்பதால் சென்சிட்டிவ்வான உளவுத்துறையில் இருக்க அவர் விரும்பவில்லை என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
இந்த நிலையில், சத்தியமூர்த்தியை மேற்குமண்டல் ஐ.ஜி.யாக நியமித்துவிட்டு, ஏ.கே.விஸ்வநாதனை உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யாக நியமிக்கலாமா? என்கிற யோசனையில் முதலமைச்சர் ஆலோசிப்பதாக நம்பத் தகுந்த வட்டரங்களிலிருந்து தகவல்கள் கிடைக்கின்றன.
இதற்கிடையே, காவல்துறைக்கு தலைவராக இருக்கும் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனின் பதவிக்கு சிக்கல் ஏற்படும் என நினைத்து சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி.பதவியைப் பிடிக்க முயற்சித்து வரும் ஜாங்கிட், டி.கே.ராஜேந்திரனின் பதவிக்கு ஆபத்து வராது என உணர்ந்துள்ளார். இதனால், சென்னை கமிஷ்னர் பதவியிலிருந்து ஏ.கே.வி. விலகி உளவுத்துறைக்கு மாற விரும்புகிறார் என்பதை அறிந்து, சென்னை கமிஷ்னர் பதவியைக் கைப்பற்ற தற்போது காய்களை நகர்த்தி வருகிறாராம் ஜாங்கிட்!
(சென்னை கமிஷ்னர் பதவியில் ஏ.டி.ஜி.பி.அந்தஸ்தில் இருக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள். ஆனால், டி.ஜி.பி. அந்தஸ்தில் இருப்பவரை கமிஷ்னர் பதவியில் நியமிக்கும் நடைமுறையை ஜார்ஜ் விசயத்தில் ஜெயலலிதா கடைப்பிடித்தது குறிப்பிடத்தக்கது )
அதேசமயம், கமிஷ்னர் பதவியை கைப்பற்ற ஜாங்கிட் முயற்சிக்கும் நிலையில், ஏ.டி.ஜி.பி.ரவியும் முயற்சிக்கிறார் என்கிறது ஐ.பி.எஸ். வட்டாரம்!