
சென்னையில் வரும் 20ம் தேதி நடைபெற இருக்கும் ஐ.பி.எல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
முன்னதாக, நேற்று மாலை அண்ணாசாலையில் ஆயிரக்கணக்கானோர் கூடி ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சிஎஸ்கே ஆடையும் எரிக்கப்பட்டது. போராட்டத்தின் போது போலீசார் தடியடியும் நடத்தினர். போராட்டம் நடைபெற்ற இடத்தில் சிஎஸ்கே டிசர்ட் அணிந்து இருந்த சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பாரதிராஜா, சீமான், அமீர், தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டதும் மற்றவர்கள் மெல்ல மெல்ல கலைந்து சென்றனர். சுமார் 7 மணியளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 20ஆம் தேதி நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வேறு இடத்திற்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியான நிலையில், நாளை துவங்குவதாக இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.