வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வேலூர் மேற்கு மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளர் முத்துதமிழ்செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக திமுகவின் பொருளாளர் துரைமுருகன், கிழக்கு மா.செ காந்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.
கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய துரைமுருகன், கட்சியில் எனக்கு இந்த உயர் பதவியான பொருளாளர் பதவி கிடைத்துள்ளது. எல்லா தொண்டர்களின் உழைப்பே திமுகவின் வளர்ச்சி ஆகும். தலைமை கழகம் நினைத்தால் ஒரு நாளில் நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டு எம்ஜிஆர் உட்பட்ட பலர் உள்ளனர். தோழமை கட்சிகளுடன் இணக்கமாக இருக்க ராஜதந்திரத்தை கடைபிடிக்க வேண்டிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. பணபலத்தை வைத்து திமுகவவை அழிக்க பல பேர் தற்போது நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள், அதனை முறியடிக்க வேண்டும். வரும் தேர்தலில் திமுக வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. திராவிட கொள்கையை கட்டிக்காக்க மீண்டும் திமுக ஆட்சிக்கு வர வேண்டும்.
போன தேர்தலில் யார் யார் திமுகவுக்கு எதிராக வேலை செய்தார் என்று தலைமை கழகத்திற்கு நன்றாக தெரியும். வேலூர் மாவட்டத்தில் உள்ள திமுகவை கட்டிக்காக்க ஒழுங்கு நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும்.
குட்கா வழக்கில் அமைச்சர்களும், காவல் துறை அதிகாரிகளும் கூடிய விரைவில் சிறைச்சாலை செல்வார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. அனைத்து அமைச்சர்களையும் நீதிமன்றம் படியேற வைத்தவர் தலைவர் ஸ்டாலின். இந்தியா முழுவதுக்கும் ஒப்பற்ற தலைவராக ஸ்டாலின் தற்போது திகழ்கிறார். இனிவரும் காலங்களில் திமுக 180 தொகுதிகளில் வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், மின்துறை அமைச்சர் தங்கமணி மின் தடையில்லை எனக்கூறுகிறார். அமைச்சர்கள் பொய் பேசுவது உண்மை என்பது இது மூலம் தெரிந்துக்கொள்ளலாம். கருணாஸ் மீது எடுத்த நடவடிக்கையை ஏன் எச் ராஜா மீது எடுக்கவில்லை ? நடவடிக்கை பாரபட்சமான முறையில் இருப்பது கண்டிக்கத்தக்கது. காவல்துறையால் தேடப்படும் நபராக உள்ள எச் ராஜாவை தமிழக கவர்னர் சந்திப்பது மிகவும் வேதனையானது.
தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருமானத்தில் பணம் கொட்டுகிறது. அதுபோக வருமான வரித்துறை மற்றும் ஜிஎஸ்டி வரி போன்றவற்றின் மூலம் பணம் வருகிறது. அதனால் பெட்ரோல் டீசல் விலை மற்ற மாநிலங்கள் குறைத்திருப்பது போல் தமிழக அரசும் உடனடியாக குறைக்க வேண்டும்.
தமிழக அரசிடம் பொதுப்பணித்துறை சார்பில் யார் யாருக்கு எந்த அடிப்படையில் ஒப்பந்தம் கொடுக்கப்பட்டுள்ளது என நீதிமன்றம் கேள்வி கேட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் இப்படி ஒரு முதல்வரின் நாணயத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. எடப்பாடி பழனிச்சாமி ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் முதல்வராக ஆகிவிட்டார், அவருக்கு இலங்கை தமிழர்கள் பற்றி ஒன்றும் தெரியாது என்றார்.