வீட்டில் திருட்டு போனால், மை தடவி பாருங்கள் என மந்திரவாதியிடம் அனுப்பும் இன்ஸ்பெக்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்தவர் நிர்மலா(40). கடந்த மாதம் 15ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து 11.5 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக கொண்டலாம்பட்டி போலீசில் புகார் கொடுக்க சென்றனர்.
அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், அதே பகுதியைச் சேர்ந்த மந்திரவாதி ஒருவரின் பெயரை சொல்லி அவரிடம் செல்லுங்கள், அவர் வெற்றிலையில் மை போட்டு, யார் திருடினார்கள் என்று உடனடியாக சொல்லிவிடுவார். அதன் பிறகு நாங்கள் குற்றவாளியை பிடித்து விடுவோம்’ என்று கூறினார். இதையடுத்து நிர்மலா குடும்பத்தினர் இன்ஸ்பெக்டர் சொன்ன முகவரியை கண்டுபிடித்து, அந்த நபர் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர், 15 நாட்கள் கழித்து வாருங்கள் என கூறினார்.
இதையடுத்து 25 நாள் கழித்து நிர்மலா குடும்பத்தினர் சென்றனர். அப்போது 850 ரூபாயை கட்டணமாக பெற்றுக்கொண்ட அந்த நபர் வெற்றிலையில் திருடன் வரவில்லை எனக்கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார். இதற்கிடையே நிர்மலாவின் வீட்டில் திருடியதாக 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து நகையை மீட்டனர்.
பிறகு 6.5 பவுன் நகையை திரும்ப ஒப்படைத்தனர். போலீசார், கொடுத்த 6.5 பவுன் நகையை எடை போட்டு பார்த்தபோது, 4.5 பவுன்தான் இருந்தது. இதுதொடர்பாக நிர்மலா குடும்பத்தினர் மாநகர துணை கமிஷனர் தங்கதுரையை சந்தித்து மனு கொடுத்தனர். இதுதொடர்பாக அவர் விசாரணை நடத்தி வருகிறார்.