Skip to main content

தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு அநீதி! தலையிடுமா தமிழக அரசு?        

Published on 21/08/2022 | Edited on 21/08/2022

 

Injustice for Tamils ​​who returned home! Will the Tamil Nadu government intervene?

 

தாயகம் திரும்பியோரின் மறுவாழ்வுக்காக துவக்கப்பட்ட ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனத்தின் தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி அல்லாத நபர்கள் ஆக்கிரமித்துக் கொண்டு அநீதி இழைப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது குறித்து தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் முதன்மை செயலாளர் உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ்.சின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் ரெப்கோ வீட்டு கடன் நிறுவனத்தை நிறுவிய இயக்குநர் முனைவர்  திருவேங்கடம். 

 

இதையறிந்து திருவேங்கடத்தை நாம் தொடர்பு கொண்டு பேசிய போது, "பர்மா, இலங்கை, வியட்நாம்   ஆகிய நாடுகளில் இருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வுக்காகவும் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ரெப்கோ வங்கியை 1969- ஆம் ஆண்டில் துவக்கினார் கலைஞர். மேலும், தாயகம் திரும்பியவர்களுக்கு வீட்டுக் கடன் முன்னுரிமை கொடுத்து வழங்குவதற்காக, ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனம் ஒன்றையும் கடந்த 2000 ஆண்டில் உருவாக்கினார் கலைஞர். 

 

ரெப்கோ வங்கியின் 100 சதவீத முதலீட்டில் இந்த ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தின் தலைவராக தமிழக அரசின் பொதுத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறையின் செயலாளர்களே நியமிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில், ரெப்கோ வீட்டு கடன் நிறுவனத்தின் நிர்வாகம் முழுவதும்  அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது.  

 

இதனால், தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வுக்காக பயன்பட்டு வந்தது இந்த நிறுவனம். மேலும், நிறுவனத்தின் சட்டவிதிகளின்படி, வீட்டுக் கடன் வழங்குவதில் தாயகம் திரும்பியவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். இதனால்  தாயகம் திரும்பிய தமிழர்களின் வீடு கட்டும் கனவுகள் நிறைவேறும். 

 

இந்த நிலையில், முந்தைய அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக வந்ததை அடுத்து, ரெப்கோ வீட்டுக் கடன் நிறுவனத்தின் நிர்வாகம் அரசிடமிருந்து நழுவியது. இந்த நிறுவனத்தின் தலைவர் பதவியிலிருந்து ஐ.ஏ.எஸ். அதிகாரியை எடுத்து விட்டு தனி நபர்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டு, அரசின் அதிகாரம் என்பது போர்ட் இயக்குநர்களில் ஒருவர் என்பதாக சுருங்கிப் போனது. 

 

தமிழக அரசிடமிருந்து தலைவர் பதவி பறிபோன நிலையில், இந்த நிறுவனத்தின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகள்  பிராமணர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதனால், முழுதும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினராக  இருக்கும்   தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு எதிரான மனநிலையிலேயே நிர்வாகத்தை நடத்தி வருகின்றனர். தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வீட்டுக் கடன்  கொடுப்பதை கிட்டத்தட்ட  நிறுத்தி விட்டனர்.

 

குறிப்பாக, 11,000 கோடி ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருப்பதில் சில கோடிகள் மட்டுமே தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. தொடர்ந்து இந்த அநீதி நடந்து வருகிறது. 

 

இன்றைய நிலையில், தமிழகம் முழுவதும் 30 லட்சம் தாயகம் திரும்பிய தமிழர்கள் வீடின்றி அவதிப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் வீட்டுக் கடன் கேட்டால் கொடுக்கப்படுவதில்லை.  

 

அதேசமயம், இது தொடர்பாக அவர்கள் ஏதேனும் பிரச்சனை செய்து விடக்கூடாது என்பதற்காக, தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு அவ்வவ்போது சில இலவசங்களை கொடுத்து, அவர்களின் நலன்களுக்காக இயங்குகிறோம் என்பதாக காட்டி கொண்டு வருகிறது இந்த நிறுவனம். 

 

தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு தேவை இலவசம் அல்ல ; அவர்களுக்கு கடன் உதவிதான். அவர்களுக்கு முன்னுரிமைக் கொடுத்து கடன் வழங்குவதற்காகத்தான் இந்த நிறுவனத்தைத் துவக்கினார் கலைஞர். ஆனால், அவரது நோக்கத்தை  சிதைத்து வருகிறார்கள் தற்போதைய நிறுவனத்தின் முக்கியஸ்தர்கள். இதனால், தாயகம் திரும்பிய தமிழர்களின் மறுவாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது.

 

தற்போதைய சூழலில் இந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர்களாக 70 வயதை கடந்து சதாபிஷேகம் காணும் தனியார்கள்தான் கோலோச்சுகின்றனர். மேலாண்மை இயக்குனராக, செயல் இயக்குனராக இருந்தவர்களின் தனிநபர் வருமானம் ஆண்டுக்கு பல கோடிகள்.  

 

தமிழக அரசின் சார்பில் இந்த நிறுவனத்தில் ஒரே ஒரு இயக்குநர் பதவி மட்டுமே இருக்கிறது. அந்த பதவியில் தற்போது ஜெசிந்தா லாசரஸ் என்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மட்டுமே இருக்கிறார். 

 

இந்த நிலையில், ரெப்கோ வீட்டுக்கடன் நிறுவனத்தின் வருடாந்திர போர்ட் மீட்டிங் நாளை திங்கள் கிழமை (22/08/2022) சென்னையில் நடக்கிறது. இந்த போர்ட் மீட்டிங்கைப் பயன்படுத்தி, கடந்த அதிமுக ஆட்சியாளர்களால் இழந்த தமிழக அரசின் அதிகாரத்தை மீட்டெடுக்க வேண்டும். சிங்கிள் மெஜாரிட்டி ஷேர் ஹோல்டர் என்ற முறையில், நிறுவனத்தின் தலைவர் பதவியை மீண்டும் தமிழக அரசே எடுக்கும் வகையில், ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும். 

 

அதன்மூலம் தனியார்களின் ஆதிக்கத்தை தடுக்க முடியும்; கலைஞரின் நோக்கமும் நிறைவேறும். இதனை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் தமிழக முதல்வரின் கவனத்துக்கு செல்லும் வகையில் புகார் கடிதம் கொடுத்தேன்" என்று விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார் திருவேங்கடம்.

Injustice for Tamils ​​who returned home! Will the Tamil Nadu government intervene?

இதுகுறித்து ரெப்கோ வீட்டுக்கடன் நிறுவனத்தின் தலைவர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டோம். ஆனால், நமது அழைப்பைத் துண்டித்தார் அவர். இதனால் அவரது கருத்தை அறியமுடியவில்லை. 

 

தனியார்களின் ஆதிக்கத்திலிருந்து இந்த நிறுவனத்தை தமிழக அரசு மீட்குமா? என்பதே தாயகம் திரும்பிய தமிழர்களின் எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக இருக்கிறது. நிறைவேற்றுமா தமிழக அரசு?

சார்ந்த செய்திகள்