எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சி அல்ல ஹிட்லர் நடத்தியது போன்ற சர்வாதிகார ஆட்சி என அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
7-வது ஊதியக்குழுவில் மறுக்கப்பட்ட 21 மாத நிலுவை தொகையை அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கவேண்டும், பழைய பென்சன் திட்டத்தை கொண்டுவரவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று 3வது நாளாக காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை சேப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களை டிடிவி தினகரன் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
3 நாட்களாகியும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை முதல்வர் நேரில் வந்து பார்க்காதது ஏன்? இது மக்களுக்கான அரசு இல்லை. தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுவது ஜனநாயக ஆட்சி அல்ல ஹிட்லர் நடத்தியது போன்ற சர்வாதிகார ஆட்சி.
தமிழகத்தை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் என 33 ஹிட்லர்கள் சேர்ந்து ஆட்சி செய்து வருகின்றனர். இவர்களிடம் எவ்வித நியாயத்தையும் எதிர்பார்க்க முடியாது. விரைவில் இந்த ஆட்சி முடிவுக்கு வரும். எந்த போராட்டத்தையும் தமிழக அரசு கண்டுகொள்ளாது, எந்த ஒரு கருணையையும் தற்போது உள்ள அரசிடம் எதிர்பார்க்கவும் முடியாது.
எனவே உடலை வருத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடும் ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தங்கள் முடிவை கைவிட வேண்டும். யாரேனும் இறந்தால் கூட ஓய்வு நீதிபதியை வைத்து விசாரணை ஆணையத்தை அமைத்து விட்டு ஆட்சியாளர்கள் அவர்கள் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருப்பார்கள் என அவர் கூறினார்.