சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அழகாபுரி கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி மஞ்சுளா. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில் இவர்களது இளைய மகனான பிரனேஷ், அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். தந்தை முனிரத்தினம் காரைக்குடியில் உள்ள ஒரு கடையில் கணக்காளராக வேலை பார்த்து வரும் நிலையில் அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தன் குடும்பத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், தனது இளைய மகன் பிரனேஷுக்கு 6 வயது இருக்கும்போது செஸ் விளையாட்டில் அவருக்கு இருந்த ஆர்வத்தை தெரிந்துகொண்ட முனிரத்தினம் பிரனேஷை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வந்துள்ளார். சிறுசிறு போட்டிகளில் கலந்துகொண்ட பிரனேஷ் நாளடைவில் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடத் தொடங்கினார். ஆனால், தனது குடும்ப வறுமை காரணமாக பிரனேஷால் மிகப் பெரிய அளவில் வெற்றிபெற முடியாமல் அவரின் சாதனைகள் தள்ளிப்போனது.
பிரனேஷ் படிக்கும் பள்ளியின் தாளாளர் சுவாமிநாதன், மாணவரின் திறமையைக் கண்டு வியப்படைந்துள்ளார். மேலும், பிரனேஷின் படிப்பில் எந்தத் தடையும் ஏற்படாதவாறு அந்த செலவைத் தானே ஏற்றுக்கொண்டு அவருக்கு பல்வேறு உதவிகளைச் செய்தும் வந்துள்ளார். இத்தகைய உதவிகளால் பல்வேறு செஸ் போட்டியில் பங்கு பெற்று வந்தார். இந்நிலையில் ஸ்வீடனில் நடைபெற்ற கிராண்ட்ஸ்லாம் போட்டியில் பங்கேற்க பிரனேஷிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், மீண்டும் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக அவர் அந்தப் போட்டியில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும், அந்த சமயத்தில் பெற்றோர்கள் கொடுத்த ஊக்கத்தாலும், பள்ளி தாளாளரும், பயிற்சியாளரும் செய்த உதவியாலும் தனியாக ஸ்வீடனுக்குச் சென்ற பிரனேஷ், கிராண்ட் மாஸ்டர் பட்டத்துடன் தங்கப் பதக்கத்தை வென்று மிகப்பெரிய சாதனையைப் படைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவின் 79வது கிராண்ட் மாஸ்டர் என்னும் சிறப்பையும், தமிழகத்தின் 28வது கிராண்ட் மாஸ்டர் என்னும் சிறப்பையும் மாணவர் பிரனேஷ் பெற்றுள்ளார். தங்கப் பதக்கத்தை வென்ற பிரனேஷ், சென்னை திரும்பியவுடன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அதன்பிறகு, காரைக்குடிக்கு வந்த பிரனேஷுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதுகுறித்து மாணவர் பிரனேஷ் பேசும்போது, "ஸ்வீடனில் நடைபெற்ற உலக சதுரங்க போட்டியில் நார்வே வீரருடன் விளையாடியது சவாலாக இருந்தது. எனக்கு உதவிய அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய ரோல் மாடல் கார்ல்சன். ஒன்பதுக்கு எட்டு புள்ளிகள் பெற்று கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளேன். என்னுடைய பெற்றோர், பயிற்சியாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசு சார்பில் உதவி செய்வதாகத் தெரிவித்துள்ளனர்" எனப் பேசினார்.