Skip to main content

47 அப்பாவி முஸ்லீம் சிறைவாசிகளை விடுவிக்க இந்திய தேசிய லீக் கட்சி கோரிக்கை!!

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

கோயம்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பு கலவரம் காரணமாக, கோவை சிறையில் நீண்ட நாள் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் அப்பாவி முஸ்லீம்களை விடுவிக்க தமிழக அரசிடம் கோரிக்கையினை வைத்துள்ளனர் இந்திய தேசிய லீக் கட்சியினர்.

 

bomb

 

இது சம்பந்தமாக இந்திய தேசிய லீக் கட்சி மாநில தலைவர் தடா ஜெ அப்துல் ரஹிம், " 1997 நவம்பர் கோவையில் நடந்த இந்த குண்டுவெடிப்பு கலவரத்துக்கு காவல்துறையே காரணம் என இந்திய தேசிய லீக் கட்சி பல சந்தர்ப்பங்களில் கூறிவந்துள்ளது. இந்நிலையில் இப்போது, கோவை குண்டுவெடிப்பு கலவரத்துக்கு காரணம் காவல்துறை எனவும், நாங்கள் காவல்துறையை இதுவரை காட்டி கொடுத்தது இல்லை என பா.ஜ.க. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பா.ஜ.க. தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். எனவே, தற்போதைய அ.தி.மு.க அரசு 1997 ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்பு கலவரத்துக்கு யார் காரணம் என விசாரணை கமிஷன் வைத்து நீதியை நிலைநாட்ட வேண்டும். கோவை குண்டுவெடிப்பினைக் காரணம் காட்டிசுமார் 20 ஆண்டுகளாக ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள  47 அப்பாவி முஸ்லீம் சிறைவாசிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும்." என தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

ஒவ்வொரு இஸ்லாமியரும் சி.ஏ.ஏ.வை வரவேற்க வேண்டும்” - அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் 

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
All India Muslim Jamaat President says Every Muslim should welcome CAA

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசால் கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் (C.A.A.) கொண்டுவரப்பட்டது. அதில் கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இந்தியா வந்தடைந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தது. இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பெரிய அளவில் போராட்டங்களும் நடைபெற்றன.

அதாவது இந்த சட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறிய இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க சி.ஏ.ஏ. வகை செய்கிறது. அதே சமயம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவில் குடியேறும் இஸ்லாமிய மக்களுக்கு குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்படவில்லை. மேலும் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவும் சிஏஏ சட்டத்தில் வழிவகை செய்யப்படாததும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கி இருந்தார். இந்நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் நேற்று மாலை முதல் (11.03.2024) அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. 

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள், தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தந்திருக்கிறார். இது தொடர்பாக, அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷகாபுதீன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “இந்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) அமல்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தை நான் வரவேற்கிறேன். இதற்கு முன்பே இதனை செய்திருக்க வேண்டும். இந்த சட்டம் தொடர்பாக இஸ்லாமியர்கள் இடையே பல தவறான புரிதல்கள் உள்ளன. இந்த சட்டத்தினால், இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. 

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதம் சார்ந்து அராஜகங்களை சந்திக்கும் இஸ்லாமியர் அல்லாதோர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் இதற்கு முன்பு எந்த சட்டமும் இயற்றப்படவில்லை. எனவே இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தால், இந்திய இஸ்லாமியர்கள் பாதிக்கப்படமாட்டார்கள். இந்தச் சட்டம் எந்த இஸ்லாமியரின் குடியுரிமையையும் பறிக்கப் போவதில்லை. கடந்த ஆண்டுகளில், தவறான புரிதல்கள் காரணமாக, இந்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. சில அரசியல்வாதிகள், இஸ்லாமியர்கள் இடையே தவறான புரிதலை ஏற்படுத்தினார்கள். இந்தியாவின் ஒவ்வொரு இஸ்லாமியரும் சி.ஏ.ஏ.வை வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்களை எட்டி உதைத்த காவலர்! - வெளியான வீடியோ காட்சி

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
police kicking Muslims engaged in prayer in delhi

சாலையில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமியர்களை போலீஸ் அதிகாரி ஒருவர் காலால் எட்டி உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லி இண்டர்லாக் பகுதியில் மசூதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இஸ்லாமிய சமூகத்தினர் வாரத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தவறாமல் மசூதிக்கு சென்று தொழுவார்கள். அந்த வகையில், இன்று வழக்கத்தை விட அதிகளவில் வந்த இஸ்லாமியர்கள் இந்த மசூதிக்கு தொழுகைக்காக கூடினர். இதனால், அந்த மசூதியில் இடப் பற்றாக்குறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. 

இதனையடுத்து, அங்கு வந்த இஸ்லாமியர்கள் மசூதிக்கு வெளியே உள்ள சாலையில் தொழுகை நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், அவர்களைக் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால், அவர்கள் தொழுகையில் மும்முரமாக இருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த போலீசார் ஒருவர், தொழுகை செய்த இஸ்லாமியர்களை காலால் எட்டி உதைத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், இஸ்லாமியர்களைக் காலால் எட்டி உதைத்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  

இது தொடர்பான வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றும் டெல்லி வடக்கு போலீஸ் ஆணையர் தெரிவித்துள்ளார்.