புதுக்கோட்டையில் நடைபெற்ற இந்திய மாணவர் சங்க மாணவிகள் மாநில மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தீப்சிதா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
"கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குறிப்பாக உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு பின்னால் ஆளும் கட்சி துணை நிற்கிறது. இதனால் காவல்துறை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாமல் நிலையில் உள்ளது.
மேலும் பெண்களுக்கு கல்வியில் முன்னுரிமை என்பது அளிக்கப்படவில்லை. அவர்களுக்கு என்று தனியாக கல்லூரிகள், விடுதிகள் ஆகியவை இருந்தாலும் அவைகள் பாதுகாப்பற்றதாக உள்ளன. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் மற்றும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நடந்த வன்முறைகளில் காவல்துறை அத்துமீறி மாணவர்களை தாக்குதல் நடத்தி உள்ளது. ஆனால் இந்த வன்முறைத் தாக்குதல் தொடர்பாக காவல்துறை இதுவரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த வன்முறைகளுக்கு பின்னால் பா.ஜ.க.வும், அவர்களது ஏ.பி.வி.பி அமைப்பும் தான் உள்ளது. அடிப்படைக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பெண்களுக்கு அடிப்படை கல்வி தரப்பட வேண்டும். ஆனால் ஆண்டிற்கு ஆண்டு கல்விக்காக மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கும் தொகை குறைவாகவே உள்ளது." இவ்வாறு அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.