நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.
இந்தியா கூட்டணி சார்பில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஞாயிற்றுக்கிழமை காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணநல்லூர் பகுதியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது டாக்டர் அம்பேத்கரின் 133 வது பிறந்த நாளில் அங்குள்ள அவரது திருவுருவ சிலைக்கு கூட்டணி கட்சியினருடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி தமிழக அரசு வகுத்துள்ள சமத்துவம் குறித்த உறுதிமொழியை அவர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இதனைத் தொடர்ந்து நாட்டார்மங்கலம், பழஞ்சநல்லூர், கருணாகரநல்லூர், அறந்தாங்கி, மாமங்கலம், கொண்ட சமுத்திரம், வடக்கு பாளையம், சோழத்தரம், குமாரக்குடி, கானூர், நாச்சியார் பேட்டை, திருமுட்டம், கள்ளிப்பாடி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
வாக்கு சேகரித்து பேசிய அவர், 'அம்பேத்கரின் பிறந்தநாளில் அவர் வகுத்தளித்த அரசியலமைப்பு சட்டத்தையும், அவர் விரும்பிய சமத்துவத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டுமானால் இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும். நடப்பது சாதாரண தேர்தல் அல்ல நாட்டையும் நாட்டு மக்களையும் காக்கும் அறப்போர். முதல்வர் ஸ்டாலின், தலைவர் ராகுல் இணைந்து பாரதிய ஜனதா பாசிச அரசு தொடரக்கூடாது வீழ்த்தப்பட வேண்டும் என தேசிய அளவில் அமைக்கப்பட்ட வியூகம் தான் இந்தியா கூட்டணி. இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் இங்கு 40 இடங்களிலும் வெற்றி பெற்றாக வேண்டும். சிதம்பரம் தொகுதி உட்பட 40 தொகுதியிலும் முதல்வர் தான் வேட்பாளர்' என பேசினார்.
விசிக காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ சிந்தனைச்செல்வன், திமுக கடலூர் கிழக்கு மாவட்ட கழக பொருளாளர் எம்.ஆர்.கே.பி.கதிரவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தேன்மொழி, கூட்டணி கட்சியினர் 200-க்கும் மேற்பட்டவர்கள் உடன் இருந்தனர்.