சுதந்திர தினத்தை அவமதிக்கும் தமிழ்நாடு அரசு -
கிராமசபை தீர்மானத்துக்கு எதிர்ப்பு
கடலூர் - நாகை மாவட்டங்களின் 45 கிராமங்களில் அமைக்கப்படும் பெட்ரோ கெமிக்கல் மண்டலத்துக்கு எதிராக பா.ம.க இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், ஆகஸ்ட் 5 ஆம் நாள் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தினார். அப்போது, ஆகஸ்ட் 15 சுதந்திர தின கிராமசபை கூட்டங்களில் இத்திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரினார்.
அதன்படி இன்று, வல்லம்படுகை, சிலம்பிமங்கலம், பெரியப்பட்டு, வில்லியநல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களில் 'எங்கள் ஊரில் பெட்ரோல்கெமிக்கல் மண்டலம் அமைக்கக் கூடாது' என்கிற தீர்மானத்தை மக்கள் முன் மொழிந்தனர். அப்போது அரசு அதிகாரிகள் அத்தீர்மானங்களை ஏற்க மறுத்துள்ளனர்.
இதன் மூலம், இந்திய ஜனநாயகத்தையும், உள்ளாட்சிக்கு அதிகாரமளிக்கும் அரசியல் சாசனத்தையும் அவமதித்துள்ளது தமிழ்நாடு அரசு. அதிகாரிகளின் எதிர்ப்பை மீறி அரியகோஷ்டி, சின்னகொமட்டி, கொத்தட்டை உள்ளிட்ட ஊர்களில் கிராமசபை கூட்டங்களில் 'பெட்ரோகெமிக்கல் மண்டல எதிர்ப்பு தீர்மானம்' நிறைவேற்றப்பட்டுள்ளது.
வல்லம்படுகை கிராமத்தில் மக்கள் கிராமசபை கூட்டத்தை புறக்கணிக்க முடிவு செய்ததால் அதிகாரிகள் மேலிடத்தில் பேசிய பின்பு கடும் இழுபறிக்கு பிறகு பெட்ரோல் மண்டலம் வேண்டாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதேபோல் பெட்ரோல், ரசாயனம், பெட்ரோலிய கெமிக்கல் மண்டல அறிவிப்பு திட்டத்தை ஏற்றுகொள்ள மாட்டோம் என்று காயல்பட்டு, ஆண்டார்முள்ளிபள்ளம், வாண்டியாம்பள்ளம், பெரியப்பட்டு, சிலம்பிமங்கலம் ஊராட்சிகளின் கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- சுந்தரபாண்டியன்