Skip to main content

சுதந்திர தினத்தன்று 15 கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

Published on 14/08/2017 | Edited on 14/08/2017
சுதந்திர தினத்தன்று 15 கிராமத்தில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கொள்ளிடம் ஆற்றில் ம.ஆதனுார் – குமாரமங்கலம் இடையே 400 கோடியில் கதவணை கட்டப்படும் என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார். 

அதற்கான இடத்தையும் பொதுப்பணி துறையினர் தேர்வு செய்து பூமி பூஜையும் நடந்தது. ஆனால்  இதுவரை பணி துவக்கப்படவில்லை. இதனை கண்டித்து விவசாயிகள் பல்வேறு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொள்ளிடக்கரை கிராமங்களாக எய்யலுார், சிறுகாட்டூர் பகுதியில் 15க்கும் மேற்பட்ட நீர் உறிஞ்சும் கிணறு கொள்ளிட ஆற்றில் அமைக்கப்பட்டு சிதம்பரம், கடலூர் நகரங்கள் மற்றும் பல்வேறு கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடி நீர் கொண்டு செல்லப்படுகிறது. இதனால் இப்பகுதியில்  நிலத்தடி நீர் மட்டம் குறைந்து தண்ணீர் பஞ்சம் பஞ்சம் ஏற்படும். தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்யமுடியாது , குடிநீரும் கிடைக்காது.



இதனை தடுக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்புணை அல்லது கதவணை  கட்டிய பிறகு கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும் என்று இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கடந்த ஒரு மாத்திற்கு முன்பு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் ஆகஸ்ட் 15ம் தேதி  சுதந்திர தினத்திற்குள் தடுப்பணை  அல்லது கதவணை கட்டுமான பணியை கொள்ளிடம் ஆற்றில் தொடங்க வேண்டும், இல்லை என்றால் கொள்ளிடக்கரையோர கிராமங்களில் கருப்பு கொடி ஏற்றி சுதந்திர தினத்தை புறக்கணித்து போராடுவது முடிவு செய்திருந்தனர். 

இந்த நிலையில் நேற்று  காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ஜெயந்தி தலைமையில் சமான பேச்ச வார்த்தை  கூட்டம் நடந்தது. இதில் பொதுப்பணி துறை அதிகாரி ஜெயராஜ், காட்டுமன்னார்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷியாம்சுந்தர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில்  நிர்வாகிகள் மணவாளன், சக்திவேல், ராதாகிருஷ்ணன்,  ஆகியோர் கலந்து கொண்டனர்.  

இதில் வட்டாட்சியர் உங்களது கோரிக்கை  மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்கப்படும் என்றார்.  அதற்கு விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் 14 ம் தேதி கட்டுமான பணிகளை துவங்குவதற்கான தளவாட பொருட்களை கொள்ளிடம் ஆற்றில் இறக்க வேண்டும், மேலும் பணி துவங்க அரசு அறிவிப்பு செய்தால் மட்டுமே கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் கைவிடப்படும் என்று தெரிவித்து சென்றனர். இதனால் சுதந்திர தின விழாவை ஆச்சாள்புரம், எய்யலூர், குச்சிப்பாளையம், அருண்மொழிதேவன், சிறுகாட்டூர், கீழ் புளியம்பட்டு, மேல் புளியம்பட்டு உள்ளிட்ட 15 கிராம மக்கள் கருப்பு கொடி ஏற்றி சுதந்திர தினத்தை புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்துவார்கள் என்று தெரிகிறது.

காளிதாஸ்

சார்ந்த செய்திகள்