தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்திய அளவில் கடந்த 100 நாட்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு 500க்கும் குறைவாக இருந்தது. கடந்த வாரம், 113 நாட்களுக்கு பின் 500 என்ற எண்ணை எட்டியது. கடந்த சில தினங்கள் முன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கொரோனா பாதிப்பு கூடிக்கொண்டே இருக்கிறது. 2 என்ற நிலையில் இருந்தது. தற்போது இந்தியா முழுவதும் இந்த பாதிப்பு பெருகிக் கொண்டு இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 500 என்ற அளவில் உள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தமிழ்நாடு அரசு நடத்திய சிறப்பு முகாம்களில் 2663 காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து அவர்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இன்புளூயன்சா வைரஸ் பாதிப்பு இருப்பது குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. தனிமைப்படுத்திக்கொள்ள சொல்வதே கூடுதலாகப் பரவக்கூடாது என்பதற்காகத்தான். அதனால் அவர்களை சமுதாயம் புறந்தள்ளப் போவது இல்லை. அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கு கூட வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் இந்த எச்சரிக்கை விடுக்கிறோம். ஹெச்3என்2 வைரஸ் காய்ச்சலுக்கான மருந்துகள் அனைத்து மருத்துவமனைகளிலும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.