காவிரியில் நீர் திறப்பு நேற்று அதிகரித்து இருந்த நிலையில், தற்போது தமிழக எல்லையான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது.
காவிரி ஒழுங்காற்றுக்குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரைக் கபினி மற்றும் கிருஷ்ணசாகர் அணையில் இருந்து கர்நாடக அரசு விடுவித்து வருகிறது. கர்நாடகாவில் இருந்து விடுவிக்கப்பட்ட நீர் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நேற்று வினாடிக்கு 9,500 கன அடி நீர்வரத்து கொண்டிருந்தது. இன்று அதிகாலை 8,500 கன அடியாக குறைந்த நிலையில் மீண்டும் உயர்ந்து தற்போது ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது.
நேற்று காலை மேட்டூர் அணைக்கு 2,500 கன அடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று காலை 9,345 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில் அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக 500 கன அடி நீர் மட்டும் திறக்கப்பட்டு வருகிறது. அண்மையில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிவைக் கண்டிருந்த நிலையில் மீண்டும் உயரத் தொடங்கி வருகிறது. முன்னதாக மேட்டூர் அணை நீர்மட்டம் 31.31 அடியில் இருந்த நிலையில் தற்போது 33.10 அடியாக அதிகரித்து உள்ளது. அணையின் மொத்த நீர் இருப்பு 8.81 டிஎம்சியாக உள்ளது.