
அண்மையில் கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தமிழகத்திற்கு நீர் வரத்து அதிகரித்திருந்தது. இதன் காரணமாக இரண்டு முறை மேட்டூர் அணை நடைபாண்டிலேயே நிரம்பி இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து குறைந்த நிலையில் தற்போது மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தானது அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல் அருவியில் பரிசல்களை இயக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை தொடர்ச்சியாக 39 நாட்கள் ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்க தடையும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடையும் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்பொழுது காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று மாலை நீர்வரத்து 22,000 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை முதல் 25,000 கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஒகேனக்கல்லில் குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் இந்த அறிவிப்பால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.