விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகரினை ஒட்டி உள்ளது ரோஷனை. இந்தப் பகுதியைச் சேர்ந்த இயேசுவின் மகன் சந்துரு. அதே பகுதியைச் சேர்ந்த செந்தாமரையின் மகன் தியாகு. இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக நேற்று மதியத்தில் இருந்து மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து நேற்று இரவு சுமார் எட்டு மணி அளவில் செஞ்சி சாலையில் உள்ள அங்காளம்மன் கோவில் அருகே இருதரப்பினரும் கத்தி, அரிவாள், இரும்பு போன்ற பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு மோதிக் கொண்டனர். இதில் சந்துரு, தியாகு மற்றும் ரோசனை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கார்த்திக் ஆகிய 3 பேரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சந்துரு, கார்த்தி ஆகிய இருவரையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தியாகு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த இருதரப்பினரின் கோஷ்டி மோதல் தொடர்பாக திண்டிவனம் டிஎஸ்பி கணேசன் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து ரோஷனை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு ஏகப்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். கோஷ்டி மோதல் தொடர்பாக ஒருவருக்கொருவர் மோதிக் கொண்டதில் அரிவாள் வெட்டு போன்ற சம்பவங்கள் திண்டிவனம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.