
வேலூர் மாவட்டம் தேவிகுப்பத்தில் திலகவதி - கார்த்திகேயன் தம்பதியினர் வாழ்ந்துவருகின்றனர். இவர்களுக்கு ஏழு வயது மதிக்கத்தக்க சபரி என்ற ஆண் குழந்தை உள்ளது. திலகவதி, கவிதா, பாக்கியலட்சுமி மூவரும் அக்காள் தங்கைகள் என்ற நிலையில், நேற்று (20.06.2021) இரவு சபரிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து சிறுவனுக்குப் பேய் பிடித்ததாகக் கூறி, பேய் ஓட்ட வந்தவாசியில் உள்ள ஒரு பாயிடம் கொண்டு செல்ல திட்டமிட்டனர். இதற்காக திலகவதி, கவிதா, பாக்கியலட்சுமி, குழந்தை சபரி 4 பேரும் ஆரணி வழியாக ஆட்டோவில் வந்தவாசிக்குச் சென்றுள்ளனர்.
போகும் வழியில் இரவு என்பதால் ஆரணிக்கு வரும் வழியில் கண்ணமங்கலம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் ஆட்டோ டிரைவர் 4 பேரையும் இறக்கிவிட்டுச் சென்ற நிலையில் சபரிக்கு மூச்சுத்திணறல் அதிகமானது. சிறுவனின் மார்பில் கை வைத்து அழுத்தும்போது சபரி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் சிறுவனின் தாய் திலகவதி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது. அதேபோல் சிறுவன் சபரிக்கு பேய் பிடித்ததாக பெண்கள் மூவரும் சிறுவனை விடிய விடிய அடித்து துன்புறுத்தியதில் சிறுவன் இறந்ததாக அப்பகுதி மக்கள் சிலர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக கண்ணமங்கலம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவுசெய்து 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.