திருவண்ணாமலை மாவட்டம் மேல் கரியமங்கலம் வனப்பகுதியில் கிடந்த நாட்டு வெடிகுண்டை எடுத்துக் கடித்த சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் கரியமங்கலம் பகுதியில் வனப்பகுதிகளின் அருகே மான், காட்டுப்பன்றி போன்ற விலங்குகளை வேட்டையாட அந்த ஊரில் சிலர் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் நாட்டு வெடிகுண்டைப் புதைத்து வைத்திருப்பது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியை ஒட்டிய பகுதியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை பழமென நினைத்து 7 வயது சிறுவன் ஒருவன் எடுத்துக் கடித்ததாகக் கூறப்படுகிறது.
இதில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் சிறுவன் படுகாயம் அடைந்து செங்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். சிறுவன் ஒருவன் நாட்டு வெடிகுண்டைக் கடித்து படுகாயம் அடைந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் அண்மையில் கேரளாவில் யானை ஒன்று நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டு வாய் சிதைந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.