திருப்பத்தூர் மாவட்டம் வழியாக சேலத்துக்கு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சி பிரமுகருமான கார்த்திக் சிதம்பரம் ஜூலை 17-ஆம் தேதி மதியம் இரண்டு மணி அளவில் சென்றார். அப்போது ஆம்பூரில் அவரை வரவேற்க காங்கிரஸ் கட்சியினர் நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். அங்கு நின்ற கார்த்திக் சிதம்பரம், கட்சி நிர்வாகிகளுடன் சில வார்த்தைகள் பேசி கட்சி பணிகள் குறித்து விவாதித்தார். அதன்பின்னர் அங்கு காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசும்போது, இந்த அரசாங்கம் கரோனாவை கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டது, மத்திய, மாநில அரசுகள் மக்களைக் காப்பதற்கு பதில் வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர் என குற்றம்சாட்டினார். தொடர்ந்து சிறையில் உள்ள சசிகலா வெளியே வருவது குறித்து கேள்வி எழுப்பியபோது, சசிகலா வெளியே வந்து அதிமுகவின் தலைமைப் பொறுப்பை ஏற்பார், தற்போது அவரை எதிர்ப்பதாக கூறிக்கொண்டு பேசுபவர்கள் அவர் வந்ததும் அவர் காலில் விழுவார்கள் என நினைக்கிறேன் என கூறிவிட்டு சென்றார்.
இந்நிலையில் ஆம்பூரில் ஊரடங்கு உத்தரவை மீறி, அனுமதியின்றி கூட்டம் சேர்த்து கரோனா தொற்று பரவும் வகையிலும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செய்தியாளர்களை சந்தித்த சிவகங்கை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் உள்பட காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் ஆம்பூர் நகர போலீசார்.
இது காங்கிரஸ் கட்சியினரை கோபமடையச் செய்துள்ளது. கடந்த ஜூலை 15ஆம் தேதி சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்லும்பொழுது அரசின் சார்பாகவும் அதிகாரிகள் வரவேற்றனர். அப்பொழுதும் சமூக இடைவெளி என்பது கடைபிடிக்கவில்லை அதிகாரிகளை கடந்து ஆளுங்கட்சியான அதிமுகவினரும் பெருமளவில் குவிந்திருந்தனர். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத காவல்துறை, தற்பொழுது எங்கள் கட்சி எம்பி மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்கிற பெயரில் வழக்கு பதிவு செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம் என்கின்றனர், திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸார்.