திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் சமீபகாலமாக பல்வேறு கொள்ளை சம்பவங்கள் நடப்பதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலக்கோட்டை காவல்நிலையம் அருகே மதுரை வத்தலக்குண்டு சாலையில் செயல்படும் ஒரு மருந்துக் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதைக் கண்ட போலீசார் உஷாராகினர். மருந்துக் கடைக்குள் மர்ம மனிதர்கள் இருப்பதைக் கண்டு, உடனே கடையைச் சுற்றி வளைத்தனர் போலீசார்.
இரண்டு போலீசார் கடையின் கதவைத் திறந்தபோது உள்ளே இருந்த கொள்ளையன் தப்பி ஓட முயல, லாவகமாகப் பிடித்த போலீசார், கடையில் இருந்து திருடி அவன் கையில் வைத்திருந்த 37 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர்.
போலீசார் விசாரணையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த கடப்பாரை திருடன் லட்சுமணன் என்பது தெரியவந்தது. லட்சுமணன் மீது தமிழகம் முழுவதும் 53 வழக்குகள் இருந்தபோதிலும், திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டு ஜெயிலுக்குச் சென்ற லட்சுமணன், ஐந்து நாட்களுக்கு முன்புதான் திரும்பி வந்திருக்கிறான். இந்த மருந்துக் கடைக்கு முன்னவே வந்து மருந்து வாங்குவது போல் நோட்டமிட்டு சென்ற லட்சுமணன் கடைசியில் தனது கைவரிசையைக் காட்டியிருக்கிறான்.
லட்சுமணன் பயன்படுத்திய கடப்பாரை, ஸ்க்ரூட்ரைவர், கட்டிங் ப்ளேடு ஆகிய ஆயுதங்களைப் பறிமுதல் செய்த நிலக்கோட்டை போலீசார், மீண்டும் லட்சுமணனை சிறைக்கே அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.