நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் போதை ஆசாமி ஒருவர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நெல்லையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் மாவட்ட ஆட்சியரின் காரின் முன்பு கூச்சலிட்டு அழுது புலம்பினார். அதனையடுத்து அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போலீசார் அவரிடம் என்ன விவரம் என்று விசாரித்த பொழுது என்ன பிரச்சனை என்று சொல்லாமல் 'தனக்கு நியாயம் வேண்டும்' எனக் கூறிக்கொண்டிருந்தார். என்னை உள்ளே அனுப்புங்கள் என்று அவர் போலீசாரிடம் கூறிய நிலையில், விசாரணை செய்துகொண்டிருந்த போலீசாருக்கு அவர் மது அருந்தி இருப்பதாகச் சந்தேகம் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து அந்த நபரிடம் மது குடித்துள்ளீர்களா என போலீசார் விசாரித்தனர். தொடர்ந்து அந்த நபர் ''இல்லை சார் ... இல்லை சார்...'' என்று கூறிவந்தார். போலீசார் மீண்டும் மீண்டும் விசாரிக்க ஒருகட்டத்தில் ஆமாம் மது அருந்தியுள்ளேன் என ஒப்புக்கொண்டார். அதனையடுத்து, போலீசார் என்ன பிரச்சனை என்று தொடர்ந்து கேட்க, ஆதார் கார்டுக்கு விண்ணப்பித்துப் பல நாட்கள் ஆகிய நிலையில் தன்னை அலைக்கழிப்பதாக அவர் தெரிவித்தார்.
மதுகுடித்திருப்பதால் நாளை வரும்படி போலீசார் அவருக்கு அறிவுறுத்த, அவரோ இடத்தை விட்டு நகர மறுத்தார். இதனால் பொறுமையிழந்த போலீசார் இருசக்கர வாகனத்துடன் அவரை வெளியே கொண்டு சென்று விட்டனர். அலுவலகத்தின் வெளியே சாலையில் வைத்து போலீசார், குடித்துவிட்டு எப்படி அரசு அலுவலகம் வரலாம். மாற்றுத்திறனாளியாக இருப்பதால் எதோ எச்சரிக்கிறோம். இதே வேறு ஒருவராக இருந்தால் உள்ளே தள்ளியிருப்போம் என எச்சரிக்க, தலையில் அடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தார் அந்த நபர். அப்பொழுது அங்கு இருந்த பெண் போலீசார் ஒருவர், மது அருந்தியது உங்க மனைவிக்குத் தெரியுமா. உங்க மனைவி எங்க இருக்காங்க அவங்க ஃபோன் நம்பரை கொடுங்க என கேட்க, மழுப்பலாக அவர் பதிலளித்தார். தொடர்ந்து விடாப்பிடியாக மனைவியின் ஃபோன் நம்பரை போலீசார் கேட்க, என்ன நினைத்தாரோ விட்டால் போதும் என இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கிளம்பினார் அந்த மாற்றுத்திறனாளி நபர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தின் உள்ளேயும் வாசலிலும் சற்று சலசலப்பு ஏற்பட்டது.