நெல்லை தாலுகாவிற்குட்பட்ட பாளை நகரின் சமீபம் உள்ள நடுவக்குறிச்சியைச் சேர்ந்தவர் பரமசிவன் (45) கூலித் தொழிலாளியான இவர் அந்தப் பகுதியில் நடக்கிற சட்ட விரோத செயல்கள் மணல் கடத்தல் கஞ்சா புள்ளிகள் பற்றிய தகவலைப் போலீசாருக்குத் தெரிவிக்கும் ஆள்காட்டியான இன்ஃபார்மராகச் செயல்பட்டிருக்கிறார்.
நேற்று முன்தினம் இரவு பரமசிவன் தன் வீட்டுக்குப் பின்புறம் வெளியே கட்டிலில் படுத்து உறங்கியிருக்கிறார். அதிகாலை வேளையில் ஒரு கும்பல் அவரது தலையில் பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டுச் சிதைத்தும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டுத் தப்பியிருக்கிறது. அவரின் அலறல் சத்தம் கேட்டு மனைவி பார்வதியும் மகனும் வந்து பார்த்த போது முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்திருக்கிறது. தகவல் அறிந்து ஸ்பாட்டுக்கு வந்த தாழையூத்து டி.எஸ்.பி. அர்ச்சனா தாலுகா இன்ஸ்பெக்டர் சாந்தி உள்ளிட்ட போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தவர்கள் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பரமசிவன் போலீசாரின் இன்ஃபர்மராகச் செயல்பட்டதுடன், சட்டவிரோதப் புள்ளிகளில் விபரங்களையும் தெரிவித்து வந்திருக்கிறார். முதற்கட்ட விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி உள்ளிட்ட இருவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்திருக்கிறது. பாண்டி தன்னுடைய பேஸ்புக்கில் ஒரினச்சேர்க்கையாளர்களுக்கென்று ஒரு ஆஃப் வைத்திருக்கிறானாம். அதன் மூலம் ஒரினச்சேர்க்கையாளர்களை ஒருங்கிணைத்து அவர்களைக் கொண்டு மிரட்டி, கஞ்சா விற்பனை மற்றும் சமூகவிரோதச் செயல்களில் ஈடுபட்டதைப் போலீசாருக்குத் தகவல் சொல்லியுள்ளாராம். அதன் விளைவே இந்தக் கோரக் கொலையா என போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக நடுவக்குறிச்சியைச் சேர்ந்த பாண்டி (22) அவரது உறவினர் சுரேஷ் (22) இருவரையும் பாளை தாலுகா போலீசார் கைது செய்ததுடன் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.