தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர். மற்றொருபுறம் அதிகப்படியான மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு தரப்புகளில் இருந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகிறது. அதற்கான பதில்களையும் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் பூட்டிக்கிடந்த வீட்டிற்கு 11,000 ரூபாய் மின்கட்டணம் வந்துள்ள செய்தி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
தரங்கம்பாடி வாழைபட்ட பகுதியில் உள்ள ஒரு வீட்டைச் சேர்ந்தவர்கள் வெளிநாட்டில் ஒரு வருடமாக இருக்கும் நிலையில் குறைந்தபட்சமான கட்டணத்தை மட்டுமே மாதாமாதம் மின் கட்டணமாக செலுத்தி வந்தனர். இந்த மாதமோ பூட்டிக்கிடந்த அவர்களது வீட்டிற்கு 11,000 ரூபாய் மின் கட்டணம் செலுத்துமாறு தகவல் வந்துள்ளது. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த காஜாமைதீன் என்பவர் வீட்டிற்கு மாதம் ஐந்தாயிரம் ரூபாய் என்ற அளவில் கட்டணம் வந்து கொண்டிருந்த நிலையில் இந்த மாதம் அதிர்ச்சி தரும் விதமாக 15,000 ரூபாய் மின்கட்டணம் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.