சிவகங்கையில் நேற்று நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “ஏழு உட்பிரிவுகளை உள்ளடக்கிய சாதிகளை, தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பெயரிட, தொடர்ந்து கோரிக்கைகள் வந்துள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்வதற்கு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பரிந்துரையின் பேரில், ஏழு உட்பிரிவுகளைக் கொண்ட சாதிகளை இனி தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பெயரிட, மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யும். தேவேந்திரகுல வேளாளர் எனப் பொதுப் பெயரிட்டாலும், ஏழு உட்பிரிவினரின் சமூகப் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு, இப்பிரிவினர் தொடர்ந்து பட்டியல் இனத்தில் இருக்கவும் குழு பரிந்துரைத்துள்ளது” என்று பேசினார்.
இந்நிலையில், மத்திய அரசிற்கு இதனைப் பரிசீலித்த தமிழக முதலமைச்சர் அதனைத் திரும்பப் பெற வேண்டும் என மதுரையில் சிம்மக்கல் பகுதியில் உள்ள வ.வு.சிதம்பரனார் சிலை அருகில், வெள்ளாளர் மற்றும் வேளாளர் அமைப்புகள் சார்பாக, 100 -க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதல்வரின் படத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் எரித்து, அவருக்கு எதிராகவும், அ.தி.மு.க அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், அரை மணி நேரம் சாலையில் இடையூறு ஏற்பட்டது. முதலமைச்சர் புகைப்படத்தை எரித்ததனால் சிறிது நேரம் அந்தப் பகுதி பரபரப்பாகக் காணப்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியும் களைந்து செல்லாததால், காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கி, நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்னர். பரிசீலனை உத்தரவை, உடனடியாக ரத்து செய்ய வேண்டும் இல்லையென்றால் தமிழகம் முழுவதும் உள்ள வெள்ளாளர் மற்றும் வேளாளர் அமைப்புகள் ஒன்று கூடி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகக் கூறினர்.