கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள பல கிராமங்களில், அடுத்தடுத்து வீடு புகுந்து கொள்ளையடிக்கும் கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. உதாரணமாக சமீபத்தில் கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஆலம்பாடி கிராமத்தில், ஒரே இரவில் 2 வீடுகளில் புகுந்து 100 பவுன் நகை, 9 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகில் உள்ள மூரார் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஜாபர் அலி என்பவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சொந்த ஊரில் வந்து தங்கி இருக்கிறார். கடந்த ஆறாம் தேதி ஜாபர் அலி தனது குடும்பத்தினருடன் வீட்டைப் பூட்டிவிட்டு கடலூர் அருகிலுள்ள நெல்லிக்குப்பத்தில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் ஜாபர் அலி தன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்கக் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த துணிமணிகள் சிதறிக் கிடந்தன.
பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகை, 2 வைரத்தோடு கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு 10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து ஜாபர் அலி சங்கராபுரம் போலீஸில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இக்கொள்ளை சம்பவம் மூரார் பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.