ரேஷன் கடைகளில் மளிகைப் பொருள்கள், சோப்பு, பற்பசை உள்ளிட்ட கட்டுப்பாடற்ற பொருள்களின் விற்பனையை பெருக்குவதற்காக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
ரேஷன் கடை பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில், கட்டுப்பாடற்ற பொருள்களின் விற்பனையை மேம்படுத்தி, கூட்டுறவு நிறுவனங்களை வளம்பெறச் செய்ய ஏதுவாக, விற்பனையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும்படி தமிழ்நாடு விநியோக ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில், மண்டல இணைப்பதிவாளர்களின் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
ஊட்டி டீ, காதி பொருள்கள் மற்றும் அரசு நிறுவனங்களால் வழங்கப்படும் இதர பொருள்களான பனை வெல்லம், சிறு தானியங்கள் ஆகியவற்றின் விளிம்புத்தொகை குறைவாக உள்ளதால், அவற்றின் விற்பனைக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டியதில்லை. இப்பொருள்கள் தவிர, அனுமதிக்கப்பட்ட பிற கட்டுப்பாடற்ற பொருள்களை ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும்போது, விற்பனையாளர்களுக்கு நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஊக்கத்தொகை வழங்க அனுமதிக்கப்படுகிறது.
அதன்படி, ஒரு மாதத்தில் சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் 50 ஆயிரத்துக்கு அதிகமாகவும், கிராமப்புற கடைகளில் 25 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் விற்பனை செய்யப்பட வேண்டும். இந்த விற்பனையில், 10 சதவீதம் மற்றும் அதற்கு மேல் விளிம்புத்தொகை உள்ள கட்டப்பாடற்ற பொருள்களின் விற்பனையை மட்டும் ஊக்கத்தொகை கணக்கீட்டுக்கு எடுக்கப்பட வேண்டும்.
இந்த இரண்டு நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விற்பனையாளர்களுக்கு அந்த மாதம் செலுத்தப்படும் விற்பனை தொகையில், ஒரு சதவீதம் ஊக்கத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் கூட்டுறவு நிறுவனங்கள் வழங்க வேண்டும். முதன்மை சங்கத்திடம் இருந்து இணைப்பு சங்கங்கள் கொள்முதல் செய்து விற்பனை செய்யும்பட்சத்தில் இந்த ஊக்கத்தொகை இணைப்பு சங்க கடை விற்பனையாளருக்கு மட்டும் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு பதிவாளர் தெரிவித்துள்ளார்.