தமிழக அரசு சார்பில் முதல் கட்டமாக 500 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் திறந்து வைக்கும் விழாவானது சென்னை தேனாம்பேட்டையில் விஜயராகவா சாலையில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் 500 இடங்களில் நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படுகின்றன. இவை சிறிய அளவிலான மருத்துவமனை போன்றது. அங்கு பல்வேறு பரிசோதனைகள், மருத்துவ ஆலோசனைகள் உள்ளிட்டவை வழங்கப்படும். நகர்ப்புறத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் இந்த நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் திறக்கப்படுகிறது.
இதற்கான அறிவிப்பு ஏற்கனவே சட்டப்பேரவையில் வெளியிடப்பட்டிருந்தது. மொத்தமாக 708 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் அமைக்கப்படும் எனக் கூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக முதல் கட்டமாக 500 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் கலந்து கொண்டார். சென்னையில் மட்டும் 140 நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கோவையில் 50, மதுரையில் 46, சேலம், திருச்சி, திருப்பூரில் தலா 25 என முதற்கட்டமாக நகர்ப்புற நல வாழ்வு மையங்கள் காணொளி வாயிலாக திறந்து வைக்கப்பட்டுள்ளன.