முறையற்ற ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் மதுரையில் காற்று மாசு சென்னையை விட அதிகமாகியுள்ளது. ஸ்மார்ட்சிட்டி திட்டங்களுக்கான தலைமை அதிகாரிகள் நியமிக்காமலே பணிகள் நடைபெறுவது தமிழக அரசின் நிர்வாக படுதோல்வி என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஆயிரம் கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட பணிகள் குறித்து ஸ்மார்ட் சிட்டி ஆலோசனை குழுவினர் கூட்டம் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
''தமிழகத்தில் நடைபெறும் ஸ்மார்ட்சிட்டி திட்டத்திற்கான சிஇஓக்கள் நியமிக்கவில்லை. தலைமையே இல்லாமல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய் புழங்ககூடிய ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் நிர்வாக பலவீனம் உள்ளது. இது தமிழக அரசின் மிகப்பெரிய தோல்வி. மதுரை ஸ்மார்ட்சிட்டி திட்டம் மக்கள் பணத்தை சூறையாடகூடிய வாசலாக உள்ளது. ஸ்மார்ட் சிட்டி தொடர்பான ஆலோசனைகுழு கூட்டங்கள் கடந்த 3 ஆண்டுகளாக கூட்டப்படவில்லை. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்பதில் மதுரை மக்களின் பங்கேற்பே இல்லை. இதேபோன்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கவில்லை. மதுரை ஸ்மார்ட்சிட்டி எந்த வரைமுறையின்றி காலக்கெடுக்குள் முடிக்காமல் நடைபெற்றுவருகிறது. முறையற்ற திட்ட பணிகளால் மதுரையில் காற்று மாசு சென்னையை விட அதிகமாக உள்ளது என அதிர்ச்சியான ஆய்வறிக்கை வெளிவந்துள்ளது.
காற்று மாசு மக்களின் சுகாதாரத்தை கெடுக்கிறது. மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் உரியகாலத்திற்குள்ளான பணிகளை கூட முடிக்கவில்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்டுள்ளோம். மதுரையிலுள்ள 50 சதவித மக்கள் போக்குவரத்து நெரிசல் பற்றி கூறியுள்ள நிலையில், தற்போது பெரியார் பேருந்துநிலைய விரிவாக்க திட்டத்தில் வணிக வளாகங்களுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் மாசி வீதிகளில் நடைபெறும் புனரமைப்பு பணிகளில் மோசமான திட்ட நடைமுறைகளை செயல்படுத்தியதால் மக்கள் துயரங்களை சந்தித்து வருகின்றனர். கீழமாசி, வடக்கு மாசி வீதிகளில் பணிகளை தொடங்கும் முன்பு பொதுமக்களின் கருத்துகளை கேட்க வேண்டும்.
இதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஏற்கனவே நடைபெறும் பணிகளை முடிக்காமல் அடுத்த பணிகளை தொடங்ககூடாது. ஸ்மார்ட்சிட்டி திட்ட பணியின் போது புராதான சின்னங்கள் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகியுள்ளது. தொல்லியல் விதிமுறைகளின்படி பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மார்ட்சிட்டி பணியின் தரத்தை நிர்ணயம் செய்யவதற்கான அனைத்து நிறுவனமும் தனியார் நிறுவனமாகவே உள்ளது. அரசு நிறுவனம் புறக்கணிப்பட்டுள்ளது. ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் வைகை ஆற்று கரைகளில் அமைக்ககூடிய பூங்காக்கள் அமைப்பதில் உள்ள பிரச்சனைகள் குறித்து நெடுஞ்சாலைதுறை மாநாகராட்சி இணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளோம்" என்றார்.
மேலும் அவர் பேசுகையில், ''மதுரை மாநகராட்சியின் புதிய விரிவாக்கப்பட்ட பகுதியில் குடிநீர் பாதாளசாக்கடை இணைப்பை உறுதிபடுத்த வேண்டும். ஒவ்வொரு மாதமும் ஸ்மார்ட் சிட்டி ஆலோசனைகுழு கூட்டம் நடத்தவுள்ளோம். ஸ்மார்ட்சிட்டி ஆலோசனைகுழு கூட்டம் நடத்துவது குறித்து கேட்டபோது குழு இருப்பதே தங்களுக்கு தெரியாது என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ச்சியாக ஸ்மார்ட்சிட்டி ஆலோசனைகுழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது பலமுறை வலியுறுத்திய நிலையிலும் கூட்டத்தை கூட்டவில்லை. இனி மாதந்தோறும் மாநகராட்சி ஆலோசனைகுழு கூட்டத்தை கூட்ட முயற்சி எடுக்கவில்லை என்றாலும் நாங்கள் கூட்டத்தை கூட்டுவோம்.
மாநகராட்சி அதிகாரிகள் யாருடைய ஒப்புதலுடன் நிதிகளை பெற்றார்கள், எந்த பணிக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாநகராட்சி பணிகளில் நிதிகள் சேமிக்கபடுவதாக கூறுகின்றனர். மதுரை மாநகராட்சி ஸ்மார்ட்சிட்டி திட்ட பணிகளில் எவ்வளவு சேமிப்பு கிடைத்துள்ளது என்ற கேள்விக்கு சேமிப்பு வராது என மாநகராட்சி ஆணையர் விளக்கமளித்துள்ளார். பாதாளசாக்கடை திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மார்ச் 2020க்குள் முடிக்கப்படும் என மாநகராட்சி கூறியுள்ளனர். ஆயிரம் கோடி ஸ்மார்ட்சிட்டி திட்ட நிதிகளிலிருந்து சேமிக்கும் நிதியிலிருந்து மாநகராட்சி பள்ளிகளின் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்'' என்றார்.